இந்தியா

சபரிமலைக்கு பெண் பக்தர் வந்ததால் சலசலப்பு

சபரிமலைக்கு பெண் பக்தர் வந்ததால் சலசலப்பு

Rasus

சபரிமலைக்கு இருமுடிகட்டி, குடும்பத்துடன் வந்த பெண்ணை பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால், அங்கு பதட்டமான சூழல் உருவானது. அவர் 50 வயதை கடந்தவர் என தெரியவந்ததை அடுத்து பக்தர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த லலிதா என்ற பெண் குடும்பத்துடன் சபரிமலைக்கு சுவாமி தரிசனத்துக்காக வந்திருந்தார். 50 வயதுக்கும் குறைவான தோற்றத்தில் அந்தப் பெண் இருந்ததால், சபரிமலையில் இருந்த பக்தர்கள் அவரை சுவாமி தரிசனத்துக்கு செல்லக் கூடாது என தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அந்தப் பெண் சுவாமி தரிசனம் செய்ய தமக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தவிர தான் 52 வயது நிரம்பியவர் என்றும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் லலிதாவையும், அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தனர்.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. எனவே சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.