இந்தியா

‘என் குழந்தைக்கு தஹியா ஐஏஎஸ் தான் தந்தை’ - டிஎன்ஏ சோதனை கேட்கும் பெண் 

‘என் குழந்தைக்கு தஹியா ஐஏஎஸ் தான் தந்தை’ - டிஎன்ஏ சோதனை கேட்கும் பெண் 

webteam

குஜராத்தில் தனது குழந்தைக்கு தந்தை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி டிஎன்ஏ சோதனைக்கு பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

குஜராத் மாநில பிரிவு ஐஏஎஸ் அதிகாரி கௌரவ் தஹியா. இவர் மீது டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை ஐஏஎஸ் அதிகாரி ஏமாற்றியதாக புகார் அளித்தார். இந்தப் புகார் குறித்து விசாரிக்க குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி ஒரு குழுவை அமைத்தார். இந்தக் குழு விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து கௌரவ் தஹியாவை குஜராத் மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்தப் புகார் அளித்த பெண் குஜராத் மாநில டிஜிபியை சந்தித்தார். அப்போது அவர் ஐஏஎஸ் அதிகாரி மீது புகார் அளித்துள்ளார். அத்துடன் தனது மகளுக்கு தந்தை இவர் தான் என்றும் கூறியுள்ளார். மேலும் இவர் தனது குழந்தையின் தந்தை என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட அப்பெண் கோரிக்கையும் வைத்தார். 

அந்தப் பெண் காவல்துறையினரிடம் அளித்த புகாரில், “ஐஏஎஸ் அதிகாரி தஹியா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் தன்னை திருமணம் செய்து கொண்டுள்ளார். அத்துடன் எனக்கு டெல்லியில் வசிப்பதற்கு மிகவும் பயமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் குறித்து தஹியா, “அப்பெண் என் மீது தேவையற்ற புகாரை அளித்துள்ளார். அவர் காட்டும் புகைப்படங்கள் அனைத்து தவறாக சித்தரிக்கப்பட்டவை” எனத் தெரிவித்துள்ளார்.