ஜார்க்கண்டில் பெண்ணொருவர் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகளை ரயிலில் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. அப்பெண்ணை ஜார்கண்ட் காவல்துறையினர் டாடாநகர் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
அப்பெண் 28 அயல்நாட்டு வகை பாம்புகளையும், கூடவே மேலும் சில பூச்சிகளையும் கடத்துவதுவதாக ரயில்வே காவல்துறைக்கு பயணிகள் தரப்பிலிருந்து சீக்ரெட்டாக தகவல் கிடைத்ததாக தெரிகிறது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது அவை மீட்கப்பட்டுள்ளன. இந்த பாம்புகள், பல கோடிகளுக்கு சர்வதேச சந்தையில் விலைபோகக்கூடியதென சொல்லப்படுகிறது.
காவல்துறை தரப்பிலான தகவல்களின்படி, “இவர் நாகாலாந்திலிருந்து மேற்கு வங்கம் சென்றிருக்கிறார். பின் அங்கிருந்து டெல்லி செல்ல முயன்றுள்ளார். இடையே இவர் வைத்திருந்த லக்கேஜை பார்த்து, அதில் ஏதோ மர்மம் இருப்பதாக பயணிகள் தரப்பிலிருந்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அவரிடம் இருந்த லக்கேஜை ஆராய்ந்தோம். அதில் பல சின்ன சின்ன பாக்ஸ்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் கோப்ரா வகை பாம்புகள் கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 28 கோப்ரா வகை பாம்புகள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சில அரிய வகை பூச்சிகளும் மீட்கப்பட்டுள்ளது” என்றுள்ளார். மேற்கொண்டு அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ள்ளப்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது.