டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் கிருஷ்ணா ராஜ் திடீரென்று மயங்கி விழுந்தார்.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள நூலகம் ஒன்றில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மத்திய வேளாண்துறை அமைச்சர் கிருஷ்ணா ராஜ் மயங்கி விழுந்தார். பின்னர், அவர் உடனடியாக அருகில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணா ராஜ் உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மக்களவை தொகுதி எம்பியாகவும் உள்ளார். டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவு காரணமாகவே அமைச்சருக்கு மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. சிசிச்சைக்கு பின்னர், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் கிருஷ்ணா ராஜ் மயங்கி விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது ஆட்சிமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிக்கு பிறகு, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.