இந்தியா

தாயை கொன்று, தங்கையை அறையில் பூட்டி வைத்த சிறுவன் - நண்பர்களை அழைத்து படம் பார்த்த அவலம்

தாயை கொன்று, தங்கையை அறையில் பூட்டி வைத்த சிறுவன் - நண்பர்களை அழைத்து படம் பார்த்த அவலம்

சங்கீதா

பப்ஜி விளையாடுவதை தடுத்ததற்காக தனது தாயை 16 வயதே ஆன மகன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த விவகாரத்தில், மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர், மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி, 16 வயதான மகன் மற்றும் 10 வயதான மகள் ஆகிய 3 பேர் மட்டும் லக்னோவில் தனியாக வசித்து வந்துள்ளனர். இதில் ராணுவ அதிகாரியின் மகன், அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தநிலையில், பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளான். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் பள்ளி நிர்வாகம், சிறுவனின் பெற்றோரை அழைத்து கண்டித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் சில தினங்களாக கடும் அதிருப்தியிலும், மன உளைச்சலிலும் அந்தச் சிறுவன் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடு இரவு யாருக்கும் தெரியாமல் செல்ஃபோனை எடுத்து பப்ஜி விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதனைப் பார்த்த சிறுவனின் தாயார், செல்ஃபோனை அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக வாங்கியிருக்கிறார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்தச் சிறுவன், வீட்டின் பீரோவில் இருந்து தனது தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து தாயாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவனின் தாயார் உயிரிழந்துள்ளார்.

தாயார் இறந்துவிட்டார் என்று அறிந்ததும், அவரது உடலை பக்கத்தில் இருந்த அறை ஒன்றிலும், இந்த சம்பவங்களை அதிர்ச்சி மாறாமல் பார்த்துக் கொண்டு இருந்த 10 வயது தங்கையை சத்தம் எழுப்பக் கூடாது என மிரட்டி மற்றொரு அறையிலும் வைத்து அந்தச் சிறுவன் பூட்டியுள்ளான். பின்னர் எந்தவித அலட்டலோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல், தனது நண்பர்கள் இருவருக்கு போன் செய்து, அவர்களை வீட்டுக்கு வரவழைத்துள்ளான் அந்தச் சிறுவன். அதன்பிறகு ஆன்லைனில் முட்டைக் குழம்பு ஆர்டர் செய்து சாப்பிட்டதுடன், நண்பர்களுடன் சேர்ந்து ‘Fukrey’ என்ற நகைச்சுவை இந்திப் படத்தை விட்டில் உள்ள டிவியில் பார்த்து ரசித்துள்ளான்.

மேலும் நண்பர்கள், சிறுவனின் வீட்டுக்கு வந்தபோது அவனது தாயார் இல்லாததைக் கண்டு, உனது தாயார் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுவன், தனது அத்தையின் வீட்டிற்கு தாயார் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளான். பின்னர் 2 நாட்கள் தாயாரின் உடலுடனே அந்த வீட்டில் சிறுவன் வசித்து வந்தநிலையில், தாயாரின் உடலில் துர்நாற்றம் வீசியபோதெல்லாம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, அறையில் வாசனை திரவியங்களை தெளித்துள்ளான். எனினும், அதையும் மீறி துர்நாற்றம் வீசியதால், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிறுவனின் வீட்டுக்கு வந்தப் போலீசார், தாயாரின் உடலை கைப்பற்றியதுடன், சிறுவனிடம் நடத்திய விசாரணையில் இந்த திடுக்கிடும் சம்பவங்கள் அம்பலமாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் பணிபுரிவதால், அரசு உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை லக்னோவில் உள்ள தனது குடும்பத்தின் பாதுகாப்புக்காக வீட்டில் விட்டுச் சென்றுள்ளார் ராணுவ அதிகாரி. அந்த துப்பாக்கியை எடுத்து தான், பப்ஜி விளையாடுவதை தடுத்ததற்காக தனது தாயாரை சுட்டுக் கொன்றுள்ளான் 16 வயது சிறுவன். தற்போது குற்றத்தை சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளதால் அடுத்தக்கட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.