மேகாலயாவில் போட்டியிட்ட 47 இடங்களில் வெறும் 2 இடங்களில் வெற்றி கண்ட பாஜக அம்மாநிலத்தில் காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைய முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும், மற்றவை 14 இடங்களிலும் வெற்றி கண்டன. பெரும்பான்மைக்கு மொத்தம் 31 இடங்கள் தேவையான நிலையில் அங்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டப்பேரவை நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி, சிறிய கட்சிகளுடனும், சுயேட்சைகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவற்காக மூத்த தலைவர்களான அகமது பட்டேல், கமல்நாத் ஆகியோரை மேகாலயாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதனிடையே வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ள பாஜக, அம்மாநிலத்தில் காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைய முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜகவை சேர்ந்த அசாம் மாநில நிதியமைச்சர் ஹிமந்த பிஸ்வா மேகாலயா சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் எங்களுக்கு குறைவான பங்குதான் இருக்கிறது. ஆனால் சிறிய கட்சி மற்றும் தேசிய மக்கள் கூட்டணி எங்களுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துளார். தேசிய மக்கள் கூட்டணி மத்தியிலும், மணிப்பூரில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருந்தபோதிலும் மேகாலயாவில் தனித்துதான் போட்டியிட்டது. இந்நிலையில் இக்கட்சியுடனும், சிறிய கட்சியுடனும் இணைந்து பாஜக அரசாங்கத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.