ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுடனான மோதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் மனைவி, ராணுவத்தில் அதிகாரியாக விரைவில் இணைய இருக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ராணுவ வீரர் நாயக் தீபக் நெய்ன்வால் கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜம்மு- காஷ்மீா் அனந்த்நாக்கில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் உயிரிழந்தார். கணவரின் மரணத்தால் துவுண்டுபோகாமல் அவரின் மனைவி ஜோதி, தனது கணவரைப் போல் தாமும் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதனையடுத்து இந்திய ராணுவத்தில், அதிகாரிகள் பணிப் பிரிவில் சேர்வதற்கான தேர்வுக்கு விடா முயற்சியுடன் படித்து தேர்ச்சி பெற்றார். ஜோதியின் விருப்பத்தை நிறைவேற்ற கணவரின் குடும்பமும் உறுதுணையாக இருந்தது.
சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் 11 மாத காலமாகப் பயிற்சி பெற்றார் ஜோதி. இந்தப் பயிற்சி நவம்பர் 20 ஆம் தேதி நிறைவடைந்தது. இதுகுறித்து ஜோதி "என் தாய், தந்தை வழியில் ராணுவப் பணியில் சேரும் முதல் நபர் நான்தான். என் முயற்சிக்கு எனது கணவர் பணிபுரிந்த படைப் பிரிவினா் முழு ஒத்துழைப்பு வழங்கினர். டேராடூனில் இல்லத்தரசியாக இருந்த நான் இப்போது ராணுவ அதிகாரியாகி இருக்கிறேன்" என்றார்.
தீபக் - ஜோதி தம்பதியினருக்கு லாவண்யா என்ற 9 வயது மகளும், ரேய்னாஷ் என்ற 7 வயது மகனும் உள்ளனர். தந்தையின் வழியிலேயே தாயும் ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்க இருப்பதற்கு குழந்தைகள் குதூகளுத்துடன் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். ஜோதியைப் போன்று சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் 153 பேர் பயிற்சியை நிறைவு செய்தனர்.