சத்தீஸ்கரை மாவோயிஸ்டுகளின் கடைசி கோட்டையாக மாற்றுவதற்கான காரணங்களையும், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சத்தீஸ்கர் சவாலாக இருப்பதன் பின்புலத்தையும் சற்றே விரிவாகப் பார்ப்போம்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் - சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் சமீபத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். சிஆா்பிஎஃப் கமாண்டோ பிரிவு, மாவட்ட ஆயுத காவல்படை, சிறப்பு அதிரடிப் படை உள்ளிட்ட படைப் பிரிவுகளைச் சோ்ந்த வீரா்கள் கூட்டாக மிகப் பெரிய அளவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் உடனடி பதில் தாக்குதல் கொடுத்தனர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரா்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளின் இந்தத் திட்டமிட்ட தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதல் மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கும். ஆனால், ஒன்று மட்டும் மாறாது... அது சத்தீஸ்கர். ஆம், மாவோயிஸ்டுகளின் தாக்குதல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சத்தீஸ்கர் மாநிலமாகத்தான் இருக்கும்.
சத்தீஸ்கரை மாவோயிஸ்டுகளின் கடைசி கோட்டையாக மாற்றுவது எது, மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சத்தீஸ்கர் சவாலாக இருப்பது ஏன் என்பதற்கு சில சம்பவங்களை விவரிக்கிறார்கள் இதில் தொடர்புடையவர்கள்.
நம்பிக்கையின்மை:
மாவோயிஸ்ட்கள் பின்னணி மற்றும் மூலதனம் எல்லாமே சத்தீஸ்கரின் தெற்கு பஸ்தாரின் காடுகள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தடை செய்யப்பட்டு 12 ஆண்டுகள் ஆகின்றன. அதன்பின்னும் இந்தக் காடுகள்தான் அவர்களின் ஆதாரமாகவும், எல்லாமுமாகவும் இருக்கின்றன. இதேபோல் பிஜாப்பூர், சுக்மா, டான்டேவாடா மற்றும் நாராயண்பூர் போன்ற சத்தீஸ்கர் மாவட்டங்களில் அதன் காடுகள், நிலப்பரப்பு மற்றும் கடுமையான மாவோயிச வலையமைப்பு ஆகியவை மாவோயிஸ்டுகளை நெருங்கவைக்க முடியாமல் இருக்கிறது.
இந்தப் பகுதிகளில் சில தகவலறிந்தவர்கள் மற்றும் தொலைபேசி நெட்வொர்க்குகள் இன்னும் பலவீனமாக இருப்பதால் பாதுகாப்புப் படையினரை அடையும் எந்தவொரு மனித உளவுத்துறையும் தாமதமாகும் அல்லது அவர்கள் தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு செய்யப்படுவார்கள். இதுபோன்ற செயல்களுக்கு முக்கியமான ஒன்று நம்பிக்கையின்மை.
பிஜாப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் கம்லோகன் காஷ்யப் என்பவர், ஏப்ரல் 2-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக கூறும்போது, "இங்குள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மாவோயிஸ்டுகளுக்காக ஏதோ ஒரு வகையில் வேலை செய்கிறார்கள். துருப்புக்களின் இயக்கம் பற்றிய தகவல்களிலிருந்து, பாதுகாப்புப் படையினர் அல்லது ஆயுதமேந்திய பணியாளர்கள் வரும் வரை, இந்த கிராமவாசிகள் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் அவர்களுக்காக வேலை செய்கிறார்கள். இந்தப் பகுதிகளில் பல தசாப்தங்களாக ஒரு பெரிய மூளைச் சலவை பிரசாரம் நடந்து வருகிறது, இது அரசாங்க மற்றும் பாதுகாப்பு படையினரின் வெற்றிடத்தையும் கொண்டுள்ளது. இது காவல்துறையை மேலும் தடை செய்கிறது" என்கிறார்.
இதேபோல், சத்தீஸ்கர் அரசாங்கத்தின் அரசாங்க அதிகாரி ஒருவர், ``இங்கு நம்பிக்கை பற்றாக்குறை பரஸ்பரமானது, வெளிப்படையானது" என்பதுடன், ``சமீபத்தில் மாவோயிஸ்டுகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜவான் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் புகைப்படங்களைப் பாருங்கள். அவரின் அருகில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அமர்ந்துள்ளனர். இது மாவோயிஸ்ட்களின் நெட்வொர்க் பற்றி பேசுகிறது. இதேபோல், சுக்மா மற்றும் பிஜாப்பூருக்குள் உள்ளே உள்ள பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் நெட்வொர்க் வேறு மாதிரி. இந்த பகுதிகளில் ஒரு முழு தலைமுறையும் மாவோயிஸ்டுகள்தான் உண்மையான அரசாங்கம் என்றும், நம்மை போன்றவர்கள் வெளியாட்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் நம்பி வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதை மழுங்கடிக்க செய்ய வேண்டும். நமது வரம்பை அதிகரிக்க வேண்டும், அவர்களை எதிரிகளாக கருதுவதை நிறுத்த வேண்டும்.
பஸ்தாரில் ஒவ்வொரு மிருகத்தனமான குற்றச்சாட்டும் மேலும் அந்நியப்படுத்தப்படுவதற்கு காரணமாகிறது. ஒரு தாக்குதலுக்குப் பிறகு, கோபமடைந்த படைகள் சென்று ஒரு கிராமத்தைத் தாக்குகின்றன. சமீபத்தில் நடந்த தாக்குதலுக்கு பின்னும் இந்தக் குற்றச்சாட்டுகள் உள்ளன. 22 பேர் இறந்துவிட்டார்கள், கோபம் இருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இதுபோன்ற கிராமத்தையே அடித்து நொறுக்கும் செயல்கள் அவர்கள் அந்நியப்படுவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்கும் உதவாது.
உளவுத்துறை தோல்வி:
என்கவுன்டர் முடிந்த உடனேயே, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மாநில அரசு மேலும் மாவோயிச எல்லைக்குள் நுழைந்து புதிய முகாம்களைக் கட்டும் என்று கூறினார். இதுதான் தவறு. ``இந்த முகாம்கள் அனைத்தும் பஸ்தாரை ஒரு போர் மண்டலமாக மாற்றியுள்ளன. இது இந்தியாவின் மிகவும் ராணுவமயமாக்கப்பட்ட இடமாகும். மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை, கிராம மக்களை எங்களுக்கு எதிராகத் திருப்ப, இது ஒரு வசதியான வாதமாகும்" என்கிறார் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர்.
கட்டுப்பாடற்ற செயல்பாடுகள்:
சத்தீஸ்கர் பாதுகாப்பு துறை வட்டாரங்கள், இப்போது மாநிலத்தில் பொதுவானதாகிவிட்ட பெரிய, திறமையற்ற செயல்பாடுகள் குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கின்றன. அதற்கேற்பவே, "இப்போது மாநிலத்தில் பொதுவானதாகிவிட்ட பெரிய, திறமையற்ற செயல்பாடுகள் குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இதுபோன்ற ஒரு பெரிய செயல்பாட்டில், ரகசியம் சாத்தியமற்றது. சுற்றியுள்ள பெரிய பகுதி ஏதோ பெரிய விஷயம் நடக்கிறது என்று தெரியும். ரேஷன்கள் முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் செல்கின்றனர். இதேபோல் மூத்த அதிகாரிகள் உள்ளேயும் வெளியேயும் செல்கிறார்கள். மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசுகிறார்கள். மேலும், நாம் இப்போது ட்ரோன்களை நம்பியுள்ளோம். கண்ணுக்குத் தெரியாத ட்ரோன் எதுவும் இல்லை. மாவோயிஸ்டுகள் அதைக் கண்டறிந்தால், நாங்கள் இப்பகுதியில் ஆர்வமாக உள்ளோம் என்பது அவர்களுக்குத் தெரியும். இது போன்ற கட்டுப்பாடற்ற செயல்பாடுகள் மோதலுக்கும் உயிரிழப்புக்கும் வழிவகுக்கின்றன" என்று ஒரு மூத்த சிஆர்பிஎஃப் அதிகாரி கூறுகிறார்.
மாவோயிஸ்ட்கள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையேயான சமாதானத்திற்கான பாதை அரசியல்வாதிகளால் தடைபட்டுள்ளதாக நம்புகிறார்கள் சத்தீஸ்கரைச் சேர்ந்த பலரும். ஆனால், அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஓர் அரசியல் தலைவர் ஒருவரோ, "உண்மை என்னவென்றால், உள்ளூர் மட்டத்தில், அனைத்து அரசியல்வாதிகளும் மாவோயிஸ்டுகள் போன்ற கிராமங்களிலிருந்து வந்தவர்கள். ஓர் அரசியல்வாதியுடன் இணைக்கப்பட்டு சாலை ஒப்பந்தம் பெறும் ஓர் ஒப்பந்தக்காரர் மாவோயிஸ்டுகளுக்கு பணம் செலுத்தாமல் அதை உருவாக்க முடியாது. இங்கே, தெளிவான கோடுகள் இல்லை, பின்னிப் பிணைந்த வாழ்க்கை மட்டுமே" என்று பேசியிருக்கிறார். இது உண்மையா என்பது தெரியாது. ஆனால், இதுபோன்ற காரணங்கள் சத்தீஸ்கரை மாவோயிஸ்ட்களின் கீழ் கொண்டுவந்து ஒவ்வொரு முறையும் பெரிய அளவிலான தாக்குதலுக்கு வழிவகுக்கிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒருமுறை நக்சலைட்டுகளை இந்தியாவுக்கு "மிகப்பெரிய உள் பாதுகாப்பு சவால்" என்று குறிப்பிட்டார். அது ஒவ்வொரு தாக்கல்களின்போது நிரூபணம் ஆகி வருகிறது.
- தமிழில்: மலையரசு | உறுதுணைக் கட்டுரை: The Indian Express