இந்தியா

மரங்கள் நட ஈஷா அமைப்பு ரூ10,626 கோடி வசூல்? - காவேரி கூக்குரலுக்கு எதிராக மனு

மரங்கள் நட ஈஷா அமைப்பு ரூ10,626 கோடி வசூல்? - காவேரி கூக்குரலுக்கு எதிராக மனு

rajakannan

காவிரி ஆற்றங்கரையில் மரங்கள் நடுவதற்காக ஈஷா பவுண்டேஷன் அமைப்பு பொதுமக்களிடம் இருந்து பணம் திரட்டுவதற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

காவிரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள 'காவேரி கூக்குரல்' இயக்கத்துக்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தப் பயணத்தை செப்டம்பர் 3 ஆம் தேதி தலக்காவேரியில் இருந்து தொடங்கினார்.

செப்டம்பர் 8 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 2 கோடி மரக்கன்றுகள் கர்நாடக அரசு சார்பில் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். அதேபோல் தமிழகத்திற்கு சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அப்போது அவருக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்தது. 

இந்நிலையில், ஈஷா பவுண்டேஷன் அமைப்பு பொதுமக்களிடம் பணம் திரட்டுவதற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சூழலியல் ஆர்வலர்கள் சாளுமரதா திம்மக்கா, ஜாதவ் பயெங்க் உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், ஒரு தனியார் அமைப்பு தன்னுடைய பிரச்சாரத்திற்காக எப்படி பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க முடியும் என கேள்வி எழுப்பட்டது. காவேரியின் கூக்குரல் பிரச்சாரத்திற்கு கர்நாடக முதல்வர் ஆதரவு அளித்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.  

மேலும், அந்த மனுவில், “ஈஷா அமைப்பு காவேரி ஆற்றினை பாதுகாக்க 253 கோடி மரங்களை நட திட்டமிட்டுள்ளது. அதற்காக, ஒரு மரத்திற்கு தலா 42 ரூபாயை மக்களிடம் இருந்து பொது நிதியாக வசூலிக்கிறது. அதாவது, ஈஷா அமைப்பு மொத்தமாக ரூ10,626 கோடி வசூலிக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை பொதுமக்களிடம் இருந்து வசூலிப்பது, நெருக்கடியை உண்டாக்கும். அரசு மற்றும் பொது நிலத்தில் மரங்களை நட இவ்வளவு பெரிய தொகையை ஒரு தனியார் அமைப்பு வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த அமைப்பு ஒரு மரக்கன்றுக்கு ரூ 42 மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இதுவரை 4 கோடி மரக்கன்றுகள் திரட்டப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு குறித்து விளக்கம் அளிக்க கர்நாடக அரசு மற்றும் ஈஷா அமைப்புக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு தொடர்ந்த 106 வயதான சாளுமரதா கர்நாடகாவில் ஹுலிகல் மற்றும் குடூர் இடையில் நெடுஞ்சாலையில் 385 வாழை மரங்களை நட்டு வளர்த்தவர். அதேபோல், ஜாதவ் பயெங்க் அசாமில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றின் கரையில் மரக்கன்றுகள் மற்றும் விதைகளை நட்டவர்.