வழிபாட்டு தலங்களுக்கு சென்று வந்தால் தங்கள் குறைகள் நிறைகளாக மாறும் என்று நம்பும் மக்கள் வட்டாரம் ஏராளம். நிறைவேறாமல் போனாலும், விநோதமான கோரிக்கைகளை முன்வைக்கும் வழக்கத்தையும் கைவிடாமல் இருப்பார்கள்.
இப்படி இருக்கையில், வேலை அல்லது படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விசா, பாஸ்போர்ட் விண்ணப்பிப்போர் கடைசி நேரம் வரை காத்திருந்தாலும் அனுமதி கிடைக்காமல் போகும்.
இதன் காரணமாக வெளிநாட்டுக்கு செல்வதற்காக காத்திருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்து போவார்கள். அப்படியான நிகழ்வுகளை தவிர்ப்பதற்காகவே சில வழிபாட்டு தலங்கள் இந்தியாவில் இருக்கின்றன. கேட்கும் போதே ஆச்சர்யமாக இருக்கிறதா?
உண்மைதான். அப்படியான நம்பிக்கையும், அதற்கான பழக்கமும் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது.
அதன்படி, பொம்மை ஏரோப்ளைன்கள் வழங்கினால் வெளிநாடு செல்லும் எண்ணம் நிறைவேறும் என்ற நம்பிக்கை பல ஆண்டுகளாகவே பஞ்சாப் மக்களிடையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
150 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஷஹீத் பாபா நிஹால் சிங் குருத்வாரா என்ற தலம்தான் வெளிநாடு செல்பவர்களுக்கான Gateway ஆக இருக்கிறது. இந்த குருத்வாரா ஹவாய்ஜஹாஜ் அல்லது ஏரோப்ளைன் எனவே அழைக்கப்படுகிறது. இந்த குருத்வாரா ஜலந்தரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தல்ஹான் கிராமத்தில் உள்ளது .
யாரேனும் வெளிநாடு செல்ல நினைத்து, விசா அல்லது பாஸ்போர்ட் பெற சிரமப்படுவோர், இந்த குருத்வாராவுக்கு சென்று பொம்மை விமானங்களுடன் பிரார்த்தனை செய்கிறார்கள், அப்படி வழிபட்டால் விரைவில் அவர்களது கோரிக்கைகள் நிறைவேறுவதாக தல்ஹான் கிராமத்தினர் தீவிரமாக நம்புகின்றனர்.
இதன் காரணமாக ஷஹீத் பாபா நிஹால் சிங் குருத்வாரா முழுவதும் பொம்மை ப்ளைன்களால் நிரம்பி வழிகிறது. ஆனால் இந்த குருத்வாரா எவரது நினைவாக கட்டப்பட்டது என்பது குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பது நினைவுக்கூரத்தக்கது.
பஞ்சாப் குருத்வாராவை போன்று ஐதராபாத்திற்கு அருகே சில்குர் என்ற பகுதியில் உள்ள பாலாஜி கோவிலும் விசா மற்றும் பாஸ்போர்ட் பெறுவதற்கு வழிபடும் தலமாக இருக்கிறது. அதன் காரணமாகவே அந்த தலம் விசா பாலாஜி கோவில் என்று அழைக்கப்படுகிறது.