தொடர் மழையால் கேரளாவின் பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு தொடர்பான பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கொக்கையாறு ஊராட்சிக்குட்பட்ட பூவஞ்சி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகளில் வசித்த 23 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதில், 17 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மண்ணிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. அதேபோல, கோட்டயம் மாவட்டம் கூட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் எட்டு வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
பத்தனம்திட்டா சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். பத்தனம்திட்டா, திருச்சூர், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 11 குழுக்கள் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கடற்படை ஹெலிகாப்டர்களை கொண்டும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
அபாய கட்டத்தைத் தாண்டி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடிய நிலையில், கோட்டயம் மாவட்டம் காஞ்சிராபள்ளி தாலுாகாவில் உள்ள முண்டகாயம் நகரில் கரையில் இருந்த முழு வீடும் இருந்த இடம் தெரியாமல் மூழ்கிய காட்சி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சபரிமலை செல்லும் வழியில் எருமேலியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் அஸ்திவாரம் அரிக்கப்பட்டு முழு வீடும் சாய்ந்து மூழ்கியது. வயல்வெளிகள், வாழைத்தோட்டங்கள் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.