இந்தியா

அனல் பறக்கும் பேச்சு... அரசியல் மீது தீராக் காதல்... யார் இந்த மஹூவா மொய்த்ரா?

அனல் பறக்கும் பேச்சு... அரசியல் மீது தீராக் காதல்... யார் இந்த மஹூவா மொய்த்ரா?

webteam

நாடாளுமன்றத்தில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் முதல் மத்திய அமைச்சர்களாக உள்ள ஸ்மிருதி ராணி, நிர்மலா சீதாராமன் வரை மொத்தம் 78 பெண் எம்.பி-க்கள். ஆனால், இந்த 78 பேரில் நாடாளுமன்ற அவைகளில் தமது செயல்பாடுகளால், அசரவைக்கும் பேச்சுக்களால் ஆளுங்கட்சியை கலங்கடித்து கவனம் ஈர்த்தவர் என்றால், கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்... அது திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா தான் என்று. மக்களவையில் மஹுவா மொய்த்ரா சமீபத்தில் பேசிய பேச்சும், அதனால் ஏற்பட்ட தாக்கமுமே இதற்குச் சான்று.

மற்ற அரசியல்வாதிகளைப் போல இல்லாமல், மஹூவா மொய்த்ராவின் வாழ்க்கை சற்றே வித்தியாசமானது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தாலும், மஹூவா பிறந்தது என்னவோ அஸ்ஸாம் மாநிலத்தில், வளர்ந்தது கொல்கத்தாவில். வேலை பார்த்ததோ அமெரிக்காவில்.

ஆம், மஹூவா அமெரிக்காவிலுள்ள மாசாசூசட்ஸ் மவுன்ட் ஹொலியோக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதம் படித்து, அமெரிக்காவில் இன்வெஸ்மென்ட் வங்கிப் பணியாளராக லட்சங்களில் சம்பளம் வாங்கும் வேலை செய்துகொண்டிருந்தவர். 2009-ஆம் ஆண்டு இந்தப் பணியை விட்டு இவர் அரசியலில் இறங்கினார். அதற்குக் காரணம், மஹூவாவுக்கு அரசியல் மீது இருந்த தீராக் காதல்.

"அரசியலுக்குள் நான் வருவேன் என்பது முன்பே தெரியும். 30 வயதை தொட்டபோது, இதுதான் சரியான நேரம் என்று அரசியலில் நுழைந்தேன். இதை முதலில் என் வீட்டில் சொன்னபோது, எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், அதையெல்லாம் மீறிதான் என் அமெரிக்க வேலையைத் துறந்து, இந்தியா வந்தேன். இதனால் பல வருடங்களாக என் குடும்பத்தினர் என்னுடன் பேசவில்லை. ஆனால், எனக்கு தெரியும்... நான் எதை விரும்புகிறேன் என்று!" என ஒரு பேட்டியில் அரசியல் மீதான தீராக் காதலை மஹுவா வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமூக சேவை மற்றும் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட மஹுவா தனது முதல் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியது திரிணாமுல் காங்கிரஸில் அல்ல, காங்கிரஸில். ராகுல் காந்தி ஆரம்பித்த 'ஆம் ஆத்மி கா சிபாஹி' (Aam Aadmi Ka Sipahi) என்கிற பிரசாரத்தின் மேற்கு வங்க பொறுப்பாளர் மஹுவாதான். ஆனால், காங்கிரஸை விட்டு வெளியேறிய திறமையாளர்கள் பட்டியலில் இவரும் சேர்ந்தார். காங்கிரஸில் இருந்து வெளியேறி 2016-ல் திரிணாமூல் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு முதல் பார்வையிலேயே மஹூவா மொய்த்ராவை பிடித்துப் போய்விட, அவரை எம்.எல்.ஏ ஆக்கினார். எம்.எல்.ஏ பணியில் தனது சிறப்பைக் காட்ட, நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணாநகர் தொகுதியில் அவரை வேட்பாளராக நிற்கவைத்தார் மம்தா. அந்தத் தேர்தலில் 63,218 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கனியைப் பறித்தார்.

அந்தத் தேர்ந்தலின் பிரசாரத்தின்போதே, மோடி அரசை கடுமையாகத் தாக்கிப் பேசியவர் மஹுவா. இதையே நாடாளுமன்றத்தில் தான் நிகழ்த்திய கன்னிப் பேச்சிலும் வெளிப்படுத்தினார். முறைப்பான முகத்துடன், 'நான் இங்கே சில முக்கியமான விஷயங்களைப் பேசவேண்டும்...' என்று உரையை ஆரம்பித்தவர், "பாஜக ஆட்சியின் மறுபக்கம் ஆபத்தானதாக இருக்கிறது. இந்த நாடு மிகவும் ஆபத்தான பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இந்திய நாட்டில் பாசிசம் தலையோங்க தொடங்கியுள்ளது. இதற்கு ஏழு உதாரணங்களை முன்னெடுத்து வைக்கிறேன். அமைச்சர்கள் தங்களின் பட்டப்படிப்பிற்கான ஆதாரத்தை காட்ட முடியாத நாட்டில் நீங்கள் எப்படி வறுமையிலுள்ள மக்கள், தாங்கள் இந்நாட்டை சேர்ந்தவர் என்ற ஆதாரம் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அத்துடன் ராணுவத்தின் சாதனைகளை ஒரு தனி நபர் எடுத்துக்கொள்வது தற்போதுதான்" என்று முழங்கினார்.

அன்று தொடங்கிய அவரின் முழக்கம் இன்று வரை மத்திய அரசின் ஒவ்வொரு சர்ச்சைக்குரிய விவகாரத்துக்கு எதிராகவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அவரின் ஒவ்வொரு உரையும் நாடு தழுவிய கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் தான் பேசுவதற்காக ஒதுக்கப்படும் குறைவான நேரத்தையும் நிறைவாகப் பயன்படுத்தும் மஹூவா மொய்த்ராவின் பேச்சுகள் வெறும் கருத்தியல் ரீதியிலானது அல்ல. எந்த ஒரு விவகாரத்தையும் உண்மைகள் - தரவுகளின் அடிப்படையில் சீட்டுக்கட்டுபோல கச்சிதமாக அடுக்குவார். மக்கள் பிரச்னைகளையும், அரசின் செயல்பாடுகளையும் ஒட்டிய அவரது உணர்வுபூர்வமான பேச்சு, நாடாளுமன்ற அவையில் அமர்ந்திருக்கும் சக எம்.பி.க்களுமே பேரமைதியுடன் உன்னிப்பாக கவனிப்பதிலிருந்தே மஹுவா மொய்த்ராவின் வசீகரப் பேச்சாற்றலை உணர முடியும்.

ஒவ்வொரு முறையில் மஹூவா மொய்த்ராவின் பேச்சு, இணையத்தில் வைரலாவதையும் கவனிக்க முடியும். அப்படி வைரலாவதற்குக் காரணம், அந்தப் பேச்சின் வசீகரம் மட்டுமல்ல... அந்தப் பேச்சுக்குள் அடங்கியிருக்கும் மக்களின் ஆதங்கமும் என்பதை அவரது ஒவ்வொரு வாக்கியமும் பறைசாற்றும்.

இம்முறை லாக்டெளன் காலத்தை உள்ளடக்கிய கடந்த 2020 ஆண்டின் மத்திய அரசின் செயல்பாடுகளை சுமார் 15 நிமிடங்களுக்கு அடக்கி, விமர்சனக் கனைகளைத் தொடுத்திருக்கிறார் மஹூவா மொய்த்ரா.

எது வீரம்? எது கோழைத்தனம்? - இந்தத் தலைப்பில் பட்டியலிட்டு பேசிய மஹூவா மொய்த்ரா, 'அதிகார மமதை, வெறுப்பு, மதவெறி, பொய் ஆகியவற்றால் மறைந்திருக்கும் கோழைகள், இந்த விஷயங்களை வீரம் என்று கருதுகிறார்கள்' என்று பாய்ச்சல் காட்டினார்.

வெவ்வேறு தருணங்களில் பல்வேறு விவகாரங்களில் இந்த அரசு வெளிப்படுத்திய வீரத்தை இங்கே சுட்டிக்காட்ட நான் விழைகிறேன் என்று தொடர்ந்தவர், 'கணக்கில்லா மரணம், உணவின்றி, பணமின்றி பல மைல் தூரம் நடை என மக்களை அலைக்கழிக்க வைத்த லாக்டவுன் குறித்து வெறும் நான்கு மணிநேர முன்பு முன்னறிவிப்பு செய்ததில் இந்த அரசு வீரத்தை காட்டியுள்ளது' என்று அவர் ஆரம்பித்தார்.

அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்ல, '18 வயதான சூழலியல் ஆர்வலர் மற்றும் ஓர் அமெரிக்க பாப் நட்சத்திரத்தின் சமூக ஊடக பதிவுகளுக்கு பதிலளிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ கட்டமைப்பு பயன்படுத்தியதில் இந்த அரசின் வீரம் காட்டப்பட்டுள்ளது... ஆனால், ஏறக்குறைய 90 நாட்களாக டெல்லியின் எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகளின் குடும்பங்களின் உணவு, நீர் மற்றும் அடிப்படை சுகாதாரத் தேவைகளை நிறைவேற்ற இதுவரை ஓர் அமைச்சகம் கூட அரசாங்கத்தால் பொறுப்பாக நியமிக்கப்படவில்லை" என்று கொந்தளித்தார்.

இம்முறை அரசை மட்டுமின்றி, நீதித்துறையின் அணுகுமுறையையும் கேள்விக்குள்ளாக்கிய மஹூவா மொய்த்ரா, "இந்த நாட்டின் தலைமை நீதிபதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, தனது சொந்த வழக்கின் விசாரணைக்கு தானே தலைமை தாங்கி, தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொண்டு, ஓய்வுபெற்ற மூன்று மாதங்களில் மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கப்பட்டு இசட்-பிளஸ் பாதுகாப்புப் பாதுகாப்புடன் சுற்றித் திரிவது, நீதித்துறை இனி புனிதமானது அல்ல என்பதை உணர்த்துகிறது" என்று ஆவேசமாக பேசினார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா.

- மலையரசு