இந்தியா

 “நான் காஷ்மீருக்கு வர தயாராக உள்ளேன்” - ராகுல் காந்தி விளக்கம்

 “நான் காஷ்மீருக்கு வர தயாராக உள்ளேன்” - ராகுல் காந்தி விளக்கம்

webteam

எந்த நிபந்தனையும் விதிக்காமல் காஷ்மீர் வர தான் தயாராக இருப்பதாக காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல்காந்தி பதில் அளித்துள்ளார்.

காஷ்மீருக்கு‌ அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை‌ நீக்கி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கை‌ தனித்தனி யூனியன் பிரதேசங்களாக‌ பிரித்து மத்திய அரசு மசோதாவை தாக்கல் செய்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காஷ்மீர் மக்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகவே இருப்பதாகவும், அங்கு அசாதாரண சம்பவங்கள் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன என ராகுல்காந்தி கருத்து தெரிவித்திருந்தார். 

இதற்குப் பதிலளித்திருந்த காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், ''என்ன நடக்கிறது என்று தெரியாமல் ராகுல்காந்தி பேசுகிறார். விமானம் அனுப்புகிறோம். அவர் காஷ்மீரை பார்த்துவிட்டு பின்னர் பேசட்டும்'' என்று தெரிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு ட்விட்டரின் பதிலளித்த ராகுல்காந்தி ''எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவுடன் நாங்கள் வருகிறோம். எங்களுக்கு விமானம் வேண்டாம். அங்குள்ளவர்களை சந்திக்க சுதந்திரம் கொடுங்கள் போதும்'' என்று தெரிவித்தார். 

இதனைக்குறிப்பிட்டு கருத்து தெரிவித்த காஷ்மீர் ஆளுநர் மாளிகை, ''ராகுல்காந்தி வருவதற்கு நிபந்தனைகளை விதிப்பதால் அவரின் வருகைக்கான கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது'' என்று தெரிவித்தது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையின் விளக்கத்துக்கு பதில் அளித்துள்ள ராகுல், ''நான் எந்த நிபந்தனையும் விதிக்காமல் காஷ்மீர் வர தயாராக உள்ளேன். எப்போது வர வேண்டும்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.