இந்தியா

பாகிஸ்தான் பிடியில் இருந்த போது மனைவிக்கு போன் செய்த அபிநந்தன் - டீ எப்படி? என கேட்ட மனைவி!

பாகிஸ்தான் பிடியில் இருந்த போது மனைவிக்கு போன் செய்த அபிநந்தன் - டீ எப்படி? என கேட்ட மனைவி!

webteam

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது. அப்போது, பாகிஸ்தான் வசம் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சிக்கினார். பின்னர், இரண்டு நாட்களில் பாகிஸ்தான் அரசு அவரை விடுவித்தது.

இதனையடுத்து, தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அபிநந்தன் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்த போது அபிநந்தன் தனது மனைவியுடன் தொலைபேசியில் பேசினார். அவர்களுக்கு இடையேயான உரையாடல் குறித்து 'தி பிரிண்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அபிநந்தன் குடித்த டீ குறித்து அவரது மனைவி கிண்டல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

அபிநந்தன் பிடிபட்டதும் காவலர் ஒருவர் அபிநந்தனின் விலாவில் கையால் குத்தி, கன்னத்தில் அறைந்துள்ளார். மற்றொரு காவலர்  'உங்கள் மனைவியிடம் பேசிக்கொள்ளுங்கள்' என அபிநந்தனிடம் தனது தொலைபேசியை கொடுத்துள்ளார். 

பாகிஸ்தானில் இருந்து அழைப்பு வந்ததும் அபிநந்தனின் மனைவி தன்வி, அழைப்பை முதலில் ரெகார்ட் செய்துள்ளார்.  பேசுவது தன் கணவன் அபிநந்தன் என்பதை உறுதி செய்த அவர், எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியாக பேசியுள்ளார். 

(அபிநந்தனின் மனைவி தன்வி)

தன்வி: நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று குழந்தைகள் கேட்டால், நான் என்ன சொல்ல வேண்டும்?

அபிநந்தன்: நான் ஜெயிலில் இருக்கிறேன் என்று சொல்

தன்வி: அவர்கள் கொடுத்த டீ எப்படி இருந்தது?

அபிநந்தன்: நன்றாக இருந்தது

தன்வி: நான் போடும் டீயை விடவும் சுவையாக இருந்ததா?
  
அபிநந்தன்: ஆமாம். சிறந்ததாக இருந்தது (சிரித்துக்கொண்டே)

தன்வி: அப்படி என்றால், தயாரிக்கும் முறையை கேட்டு தெரிந்து வாருங்கள்