கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு பன்றிப் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கேரளாவின் சில பகுதிகளில் பன்றி இறைச்சி விற்கும் இறைச்சிக் கடைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
கோட்டயம் மாவட்டத்தில் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கோட்டயம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பி கே ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள பண்ணையில் உள்ள பன்றிகளை கொலை செய்து புதைக்க கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் என்ற வைரஸ் தாக்கினால் 100 சதவீத மரணத்தையை ஏற்படுத்தும். இந்த வைரஸ் வீட்டில் வளர்க்கப்படும், பன்றிகளையும் காட்டுப் பன்றிகளையும் பாதிக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள் அதிக காய்ச்சல், பசியின்மை, சோர்வு, தோல் சிவந்து போதல், தோல் புண்கள், வயிற்றுப்போக்கு ஆகியவை நாளுக்கு நாள் தீவிரமடையும். இது மனிதர்களை பாதிக்காது என்றாலும், உடல் தொடர்பு மற்றும் திரவ பரிமாற்றம் மூலம் ஒரு பன்றியிலிருந்து மற்றொரு பன்றிக்கு தொற்று பரவுகிறது.
கேரளாவில் பறவைக் காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சலும் பரவுவதால் ஒன்றிய அரசின் சுகாதார குழு அம்மாநிலத்திற்கு விரைந்துள்ளது. இதனால் கேரளாவை ஒட்டிய தமிழ்நாட்டின் எல்லைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.