அரசியல் விமர்சகர்கள் இந்த மகாராஷ்டிர தேர்தலை மூன்று வார்த்தைகளில் வர்ணிக்கின்றனர். அது, வரலாறு காணாத குழப்பம். ஏனெனில், எந்த ஒரு அரசியல் நோக்கர்களும் இந்தக் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்பதை அறுதியிட்டு சொல்லவில்லை. அதுமட்டுமின்றி, மாநிலத்திற்குள் நடக்கும் சட்டபேரவைத் தேர்தல் என்றாலும், மாநிலக் கட்சிகள் மிகவும் வலுவிழந்து இருக்கும் தேர்தலாகவும் இத்தேர்தல் பார்க்கப்படுகிறது.
இரு மாநிலக் கட்சிகள் உடைந்துள்ளன. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் என இரு கட்சிகளும் உடைந்து, தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளன. வேறு எந்த மாநிலங்களிலும் நிகழாதவாறு கூட்டணியில் இருக்கும் பிரதான தேசிய கட்சி 100 தொகுதிகளுக்கும் மேலும், கூட்டணியில் இருக்கும் பிராந்திய கட்சிகள் இரண்டும் 50 முதல் 80 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுகின்றன.
பிற மாநிலங்களில் கூட்டணியாக அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்தித்தாலும், பெரும்பாலும் பிரதான கட்சி அதிகமான தொகுதிகளிலும், பிராந்திய கட்சிகள் 20 முதல் 40 தொகுதிகளுக்குள்ளும்தான் போட்டியிடும்., எனவே மகாராஷ்டிராவில் நடக்கும் தேர்தல் பங்காளிச் சண்டையாகவே பார்க்கப்படுகிறது. யார் உண்மையான தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனை என்பதை அறிவதற்கான தேர்தலாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த தேர்தல் வேறு ஒரு முக்கிய காரணத்திற்காகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது, இதுவரை இந்துத்துவா அரசியலை மையப்படுத்தியே சட்டமன்ற தேர்தல் களம் அங்கு அமைந்திருந்தது. சிவசேனா மற்றும் பாஜக என இரு இந்துத்துவா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. அதை ஒட்டியே வியூகங்களும் இருக்கும். என்னதான் சரத்பவார் மிக முக்கியமான முகமாக மாநிலத் தேர்தல் களத்தில் இருந்தாலும், களம் என்பது இந்துத்துவா முகத்தோடுதான் இருந்தது. ஆனால், இம்முறை கூட்டணி அரசியலாக தேர்தலைச் சந்திக்கிறது மகாராஷ்டிரா. இருபுறமும் வலுவான கூட்டணி.
மூன்றாவது, இந்தத் தேர்தல் இரு அரசியல் தலைவர்களுக்கு வாழ்வா? சாவா? தேர்தல். அந்த இருவர், சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே. சிவசேனாவை உடைத்துக்கொண்டு பாஜகவுடன் இணைந்து முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே. பாஜகவின் கைப்பாவையாகதான் ஏக்நாத் ஷிண்டே இருப்பார் என்ற பேச்சு ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், தனது அரசியலால் மகாயுதி கூட்டணியின் மிக முக்கிய முகமாகிப் போனார் ஏக்நாத் ஷிண்டே. ஏனெனில், ஆட்டோ ஓட்டுநராக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஏக்நாத் ஷிண்டே. அவரை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற பெயர் இருக்கிறது.
அதுமட்டுமின்றி, ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களுக்கான ஒருவராக ஏக்நாத் ஷிண்டேவைப் பார்க்கின்றனர். உத்தவ் தாக்கரேவை இப்படி யாராலும், அதாவது மக்கள் எளிதில் அணுகமுடியுமா என்றும் ஒப்பிடும் நிகழ்வுகளும் நடக்கிறது. அத்தோடு, வாழ்நாள் முழுவதும் இந்துத்துவா அரசியலை மேற்கொண்டவர் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே. கடைசி மூச்சு வரை காங்கிரஸ் கட்சியை எதிர்த்தவர். ஆனால், உத்தவ் தாக்கரே காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தார். மறுபுறமோ ஏக்நாத் ஷிண்டே மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தது அவருக்கான பலமாக பார்க்கப்படுகிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் நேரடியாக மும்பை பகுதியில் மட்டும் 27 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன.
அடுத்தது சரத்பவார். மகராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி அமைவதில் மிக முக்கியப்பங்கு வகித்தவர். களத்தின் சூத்திரதாரியாக இருந்தவர். ஆனால், அஜித் பவார் 40 எம்எல்ஏக்களுடன் கட்சியை உடைத்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து துணை முதலமைச்சர் ஆனார். எனவே, இந்த தேர்தல் சரத்பவாருக்கும் அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கும் மிக முக்கியமான தேர்தல். கடந்த மக்களவைத் தேர்தலின்போது கூட சரத்பவார் மீது இருந்த அனுதாபத்தால் பல இடங்களில் அவருக்கு வாக்குகள் விழுந்தன என்ற பார்வை இருக்கிறது. அதுமட்டுமின்றி சரத்பவாரை ஆதரிக்கும் மக்கள் சிந்தாமல் சிதறாமல் தங்களது வாக்குகளை அவருக்கே அளித்ததால் பல இடங்களில் அவரால் வெல்ல முடிந்தது. இந்நிலையில்தான் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும், தலைமையை தனது மகள் சுப்ரியா சுலேவுக்கு மாற்றவும் மிக முக்கியமான தேர்தலாக இதைப் பார்க்கிறார் சரத்பவார்.