1931 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி உத்தரபிரதேசத்திலுள்ள அலகாபாத்தில் தய்யா சமஸ்தானத்தின் மன்னருக்கு மகனாக பிறந்தவர் விஸ்வநாத பிரதாப் சிங் என்ற விபி சிங். இதனை அடுத்து அவருக்கு 5 வயதாக இருக்கும் போது மண்டா சமஸ்தானத்தின் ராஜாவான பகதூர் ராம்கோபால் சிங் விபி சிங்கைத் தத்தெடுத்துக் கொண்டார். சிறுவயது முதலே விபி சிங்கிற்கு ஓவியங்களின் மீது ஆர்வம் இருந்தது.
இருந்த போதும் காங்கிரஸ் கட்சி மீது ஏற்பட்ட ஆர்வம் அவரை பொதுவாழ்வு நோக்கி இழுத்தது. உத்தரபிரதேசத்தில் உருவாகும் அரசியல் தலைவர்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளதை இந்தியா பார்த்து வந்துள்ளது. அந்த வரிசையில் வி.பி. சிங்கும் இணைந்தார்.
பத்தாண்டுகளுக்குள் உத்தரபிரதேச முதலமைச்சர், மத்தியில் வர்த்தகத்துறை அமைச்சர், நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், பிரதமர் என பல்வேறு பதவிகளில் இருந்தவர் வி.பி. சிங். அனைத்து பொறுப்புகளிலும் சில ஆண்டுகளே இருந்தாலும் அனைத்திலும் தனது பெயரை நிலை நிறுத்திவிட்டு சென்றவர் வி.பி. சிங்.
உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக 1980 முதல் 82 வரை என இரண்டு ஆண்டுகள், 1983 ஆம் ஆண்டு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர், 1984 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் என அடுத்தடுத்து பதவிகள் அவரைத் தேடி வந்தன.
1984 ஆம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தியின் மறைவுக்குப் பின் அவரது மகன் ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமாரானார். அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் 1987 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் வி.பி.சிங். இந்த சூழலில் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் வி.பி.சிங்கிற்கும் முரண்பாடு ஏற்பட காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
இதனை அடுத்து ஜன் மோர்ச்சா என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் வி.பி.சிங். இந்த கட்சி 1987 ஆம் ஆண்டு காந்தி ஜெய்ந்தியின் போது உருவாக்கப்பட்டது. உடனடியாக வந்த அலகாபாத் இடைத்தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வி.பி.சிங். இதனை அடுத்து 1988 ஆம் ஆண்டு ஜனதா கட்சி, லோக்தளம், காங்கிரஸ் (எஸ்) ஜனமோர்ச்சா போன்ற கட்சிகள் இணைந்து ஜனதா தளம் உருவாக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் விபி. சிங்.
இதனை அடுத்து 1989 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த ஜனதா தளம் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணி அந்த தேர்தலில் தேசிய அளவில் 145 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் பாஜகவும் 88 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்ததால், பாஜக தேசிய முன்னணிக்கு ஆதரவு அளித்தது. இதன் காரணமாக தேசிய முன்னணியின் தலைவர் வி.பி. சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
பிரதமராக 11 மாதங்களே அவர் இருந்தாலும் அக்காலக்கட்டத்தில் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியவர், காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர். 1980 ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் அறிக்கை தயாராகி இருந்தாலும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு மண்டல் கமிஷன் படி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு தேசிய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டை 1990ல் கொண்டு வந்தவர் வி.பி.சிங். இதன் காரணமாக அவரை ’மண்டல் கமிஷன் நாயகன்’ என முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழ்ந்தார்.
ஜனதா கட்சியில் இருந்த வி.பி.சிங்தான் கர்நாடகாவின் பெரும் எதிர்ப்பையும் மீறி 1990 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். “இதன் அடிப்படையில்தான் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது” என்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன்.
பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என சட்டத்தை கொண்டு வந்த பெருமையும் வி.பி. சிங்கையே சேரும்.