கொச்சி அருகே களமச்சேரியில் யாகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் ஒரு சிறுமி உள்ளிட்ட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது தாம்தான் என கூறி டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார்.
வெடிகுண்டுகளை தயாரிக்க நாட்டு வெடிமருந்துகளை கொச்சி நகர்ப்பகுதியிலேயே வாங்கியதும், அதனை ஆலுவா பகுதியில் உள்ள மனைவி வீட்டில் வைத்து டொமினிக் மார்ட்டின் தயாரித்ததும் தெரியவந்துள்ளது. களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என டொமினிக் கைது செய்யப்படுவதற்கு முன் மத்திய அமைச்சர் ராஜூ சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, “கூட்டம் தொடங்கி பாடல் பாடியதும் பிரார்த்தனைக்காக எழுந்து நின்றோம். உடனேயே ஒரு குண்டு வெடித்தது. பிறகு 2 குண்டுகள் வெடித்தன. அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. 2,500 க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தோம். கூட்டரங்கம் திறந்தவெளியில் இருந்ததால் வெளியேறினோம். அப்போது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. ஆனால், புகை மண்டலமாகவும், தீப்பற்றி எரிந்துகொண்டும் இருந்தது” என்றார்.