மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது.
200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில், 199 தொகுதிகளுக்கு கடந்த நவ.25ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கரம்பூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குருகுத் சிங் காலமானதால், அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்தியா டுடே கருத்துக் கணிப்பின்படி, காங்கிரஸ் 86 முதல் 106 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகவும், பாஜக 80 முதல் 100 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளுக்கு 18 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காங்கிரஸ் 94 முதல் 104 இடங்களிலும், பாஜக 80 முதல் 90 இடங்களிலும் பிற கட்சிகள் 14 முதல் 18 இடங்கள் வரையும் வெல்லும் வாய்ப்பிருப்பதாக இந்தியா டிவி கணித்துள்ளது.
டிவி 9 நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் 90 முதல் 100 இடங்கள் வரையும், பாஜக 100 முதல் 110 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற கட்சிகள் 5 முதல் 15 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக 115 முதல் 130 இடங்களையும் காங்கிரஸ் 65 முதல் 75 இடங்களையும், பிற கட்சிகள் 12 முதல் 19 தொகுதிகளையும் கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, 108 முதல் 128 இடங்களில் வென்று பாஜக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 56 முதல் 72 இடங்கள் மற்றும் பிற கட்சிகள் 13 முதல் 22 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
சிஎன்என் கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் 74 தொகுதிகளில் வெல்லலாம் என்றும், பாஜக 111 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பிருப்பதாகவும், பிற கட்சிகள் 24 தொகுதிகளில் வெல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன் கி பாத் கருத்துக்கணிப்புப்படி, காங்கிரஸ் 62 முதல் 85 வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 100 முதல் 122 தொகுதிகள் வரை வெல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 90 முதல் 100 தொகுதிகள் வரை வெல்லலாம் என ஜி போல்ஸ்டார்ட் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. பாஜக 100 முதல் 110 தொகுதிகளில் வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த சில தேர்தல்களாக பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் மாறி மாறி ஆட்சி அமைப்பதும், தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.