நாட்டை தாங்கும் 4 முக்கிய தூண்களுக்கான வளர்ச்சியை மையப்படுத்தி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்..
அந்த 4 தூண்கள் எவை, அவற்றுக்கான திட்டங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்...
“ஏழை... மகளிர்... இளைஞர்.. விவசாயிகள்..” இவர்கள்தான் நாட்டின் 4 தூண்கள் என்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த 4 பிரிவினரின் வளர்ச்சியை உள்ளடக்கிய திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருவதாகவும், அதன் பயனாக கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமைக்கோட்டிலிருந்து வெளியே வந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
பிரதமரின் ஜன் தன் வங்கி கணக்குகள் மூலம் 34 லட்சம் கோடி மானியத்தொகையை அரசுசெலுத்தியுள்ளதாகவும், அதனால் அரசுக்கு 2.7 லட்சம் கோடி சேமிப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கடனுதவி திட்டத்தால் 78 லட்சம் நடைபாதை வியாபாரிகள் பயன்பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிசான் சம்மான் யோஜனா, ஆன்லைன் ஏல முறை, பயிர் காப்பீடு போன்றவற்றால் 11கோடியே 80 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களே நாட்டின் வளம் என்பதை உணர்ந்து, கல்வியின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திறன் இந்தியா திட்டம் மூலம் சுமார் ஒன்றரை கோடி இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார். முத்ரா யோஜனா திட்டத்தில் 22.50 லட்சம் கோடி கடன், இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசின் சீரிய முயற்சியால், ஆசிய விளையாட்டு போட்டிகள், பாரா ஆசிய விளையாட்டுகளில் இந்தியா சிறந்து விளங்குவதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை குறிப்பிட்ட அவர், இந்தியாவில் 80 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் இருப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.
பெண்கள் மேம்பாட்டில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் 43 சதவீதம் பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் உயர்கல்வி பயில்வதாகவும், இது உலகளவில் மிக அதிகம் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முத்தலாக் தடை சட்டம், நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் 3ல் 1 இடம் பெண்களுக்கு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 70சதவீதம் பெண்கள் பெயரில் வீடு போன்ற திட்டங்களால் பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை மத்திய அரசு உணர்த்தியுள்ளதாக நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை அமைந்திருந்தது...