நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, நாள்தோறும் இணையதளத்தில் ஆன்மீக சொற்பொழிவு வீடியோக்களை வெளியிட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறார். இதனிடையே, ஈகுவடார் நாட்டின் தீவு ஒன்றினை வாங்கியுள்ளதாகவும் அதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தங்கள் நாட்டின் தீவு எதையும் வாங்கவில்லை என்றும், அவர் ஹைதி நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாகவும் ஈகுவடார் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், “நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. நித்தியானந்தா பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படும் நபர் என்பதால் பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது. நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருந்தால், தூதரகங்கள் மூலம் அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அவர்.