இந்தியா

“இப்படியும் ஒரு கணவரா...?” - நெகிழ்ந்த மீட்புக் குழு

“இப்படியும் ஒரு கணவரா...?” - நெகிழ்ந்த மீட்புக் குழு

webteam

கேரளாவில் கடந்த 8ஆம் தேதி முதல் கனமழை பெய்துவருகிறது. இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முப்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் தத்தளிப்பவர்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். உணவு குடிநீரின்றி தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பல்வேறு இன்னல்களுக்கு நடுவே வெள்ளப் பாதிப்புள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி மீட்புப் பணிகளை மேற்கொள்கையில் நிகழ்ந்த சம்பவங்களை அவர்கள் தங்களது சக வீரர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.  அப்படி, தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் பிஜு என்ற வீரர் பகிர்ந்து கொண்ட ஒரு மனதை உருக்கும் நிகழ்வுதான் இது. தமிழகத்தின் அரோக்கோணம் பெட்டாலியனில் இருந்து சென்ற மீட்புக் குழுவினர் கேரளாவில் மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு திரிச்சூர் மாவட்டத்தின் பொத்திச்செரி பகுதியில் இருந்து ஒரு போன் வந்துள்ளது. அவர்கள் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பிஜூ கூறுகையில், “அந்த ஊருக்கு செல்வதற்கு வழிகள் மிகவும் சிரமமாக இருந்தன. இறுதியாக உள்ளூர்வாசி ஒருவர் எங்களுக்கு வழியை கூறினார். எங்களில் 4 பேர் அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் ரப்பர் படகில் கிளம்பிச் சென்றோம். அங்கிருந்த தண்ணீர் வற்றிய ஒரு இடத்திற்கு சென்றோம். அங்கு கிராம மக்கள் டிராக்டருக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் ஏறி பொத்திஸ்செரி கிராமத்திற்கு சென்றோம். அங்கிருந்து 2 அல்லது 3 கிலோமீட்டர் இருக்கும். 

அங்கிருந்து படகு ஒன்றில் ஏறி போன் செய்த ஜோசப் என்பவரின் வீட்டிற்கு சென்றோம். அவரது வீட்டின் கீழ் தளம் முழுமையாக நீரில் மூழ்கிவிட்டது. அவர் முதல் தளத்தில் இருந்தார். நாங்கள் வீட்டின் முதல் தளத்திற்கு ஏறிச் சென்றோம். முதல் தளத்தில் தனது மனைவி செரினாவின் சடலத்திற்கு அருகில் அவர் உட்கார்ந்திருந்தார்.  சடலத்தை சுற்றிலும் எறும்புகளும், பூச்சிகளும் வட்டமிட்டன. எங்களுடன் வந்த ஒரு வீரருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. கணவர் ஜோசன் தனது மனைவின் உடலுடன் நெருக்கமாக பிடித்துக் கொண்டிருந்தார். அவர் மிகவும் கலக்கமடைந்திருந்தார். தனது மனைவியை விட்டு வர அவர் விரும்பவில்லை. சிறிது நேரம் நாங்கள் ஆலோசனை செய்தோம். பின்னர் அந்த உடலை ஒரு ஷீட்டில் மூடினோம். செரீனாவின் உடலையும், ஜோசப்பையும் படகில் ஏற்றி வந்தோம். 

செரினாவின் உடலை 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொத்திஸ்செரி சர்ச்சுக்கு கொண்டு சென்றோம். இது மிகவும் பயங்கரமான அனுபவம். ஆனால், அதைப்பற்றி சிந்திக்கவும் எங்களுக்கு நேரமில்லை. அடுத்த மீட்புப் பணிக்கு அங்கிருந்து விரைந்துவிட்டோம்” என்று உருக்கமாக கூறினார்.