கும்னாமி பாபாவாக நேதாஜி வாழ்ந்தாரா என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. தைவான் நாட்டில் கடந்த 1945 ஆம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக மத்திய அமைச்சகம் ஆவணங்கள் வெளியிட்டது. ஆனாலும் நேதாஜி, கும்னாமி பாபா என்ற பெயரில் வசித்து வந்ததாக கூறப்பட்டது. இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்ததாகவும், எனவே கும்னாமி பாபாதான் நேதாஜி என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதனை அடுத்து 2016ம் ஆண்டு நீதிபதி விஷ்ணு சஹாய் தலைமையில் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக்குழு நேதாஜி தொடர்பான தகவல்களையும், கும்னாமி பாபா தொடர்பான தகவல்களையும் சேகரித்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை தன்னுடைய அறிக்கையை உத்திரப்பிரதேச அரசிடம் விசாரணைக்குழு அளித்துள்ளது. அதில் நேதாஜிதான் கும்னாமி பாபாவா என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
தன்னுடைய அறிக்கையில் சில ஒற்றுமைகளையும் விசாரணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதன்படி நேதாஜிக்கு ஆங்கிலம், வங்காள மொழி, ஹிந்தி சரளமாக தெரியும். அதே போல் கும்னாமி பாபாவுக்கு அதே 3 மொழிகள் சரளமாக தெரிந்துள்ளது. கும்னாமி பாபா அவரின் ஃபைசாபாத் வீட்டில் வசித்து வந்தார். அவர்தான் சுபாஷ் சந்திர போஸ் என சந்தேகம் எழுப்பப்பட்ட உடனேயே அவர் அந்த வீட்டைக் காலி செய்து வெளியேறிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளது.