மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவிற்கு உள்பட்ட ஒரு கிராமத்தில் அண்மையில் தார் சாலை போடப்பட்டுள்ளது. பிரதமரின் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் போடப்பட்ட இந்த சாலையின் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றதாக கிராம மக்கள் புகார் கூறி வந்தனர். ஆனால் ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாலை போடப்படுவதாக ஒப்பந்ததாரர் கூறினார்.
இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையை கிராம மக்கள் தங்கள் வெறும் கைகளாலேயே தூக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. தரமற்ற இந்த சாலை பணிக்கு ஒப்புதல் அளித்த பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மகாராஷ்டிரா அரசை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேக் இன் இந்தியா இணையதளத்தில் உள்ள தகவலின்படி, 63.32 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள உலகின் இரண்டாவது பெரிய சாலை உட்கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாலை கட்டுமானத்தை செயல்படுத்த பல்வேறு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொதுப்பணித் துறைகள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், எல்லைச் சாலைகள் அமைப்பு மற்றும் இந்திய நெடுஞ்சாலைப் பொறியாளர்கள் அகாடமி (IAHE) உள்ளிட்டவை இதில் அடங்கும்.
முன்பெல்லாம் சரளை, மணல் ஆகியவற்றின் கலவையோடு சாலை போடப்பட்டு வந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக பொறியாளர்கள் சாலையின் நீடித்த தன்மையை அதிகரிக்க கான்கிரீட் கலவையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இப்படியான நிலையில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோ, மக்களுக்கு சாலை பாதுகாப்பு மீது சந்தேகத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.