இந்தியா

காவி மற்றும் வெள்ளைநிற வள்ளுவர் படங்கள் போட்டு வெங்கையா நாயுடு வாழ்த்து

காவி மற்றும் வெள்ளைநிற வள்ளுவர் படங்கள் போட்டு வெங்கையா நாயுடு வாழ்த்து

webteam

திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பின்னர் அதை நீக்கினார்.

திருவள்ளுவரை போற்றும் விதமாக பொங்கலின் இரண்டாம் நாளான மாட்டுப்பொங்கலான இன்று திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக அமைச்சர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை ட்விட்டரில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பகிர்ந்தார். மேலும், தமிழ் கவிஞர், தத்துவஞானி, துறவி என திருவள்ளுவரை புகழ்ந்த வெங்கையா நாயுடு, திருக்குறள் மூலம் அறத்தின்படி எப்படி வாழ்வது என வழிகாட்டியவர் திருவள்ளுவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

அவருடைய தமிழ் பதிவில், “சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது. அறநெறி, மாண்புகள், தார்மீகநெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல் எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக திகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் பதிவிட்ட பதிவிற்கு காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தையும், தமிழில் பதிவிட்ட பதிவில் வெள்ளை நிற உடை அணிந்து எவ்வித மத சாயமும் இல்லாமல் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தையும் வெங்கையா நாயுடு பகிர்ந்திருந்தார். ஆனால் சிலமணிநேரத்திற்குப் பிறகு காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெங்கையா நாயுடு நீக்கினார்.

காவி உடையுடன் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தை தமிழக பாஜகவினர் ஏற்கெனவே பகிர்ந்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.