வாட்டள் நாகராஜ் கோப்புப் படம்
இந்தியா

காவிரி நீரா... ‘லியோ’ படமா? எச்சரிக்கை விடுத்த வாட்டாள் நாகராஜ்!

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கக்கூடாது என வலியுறுத்தி கன்னட கூட்டமைப்பு சார்பில் வாட்டள் நாகராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் தமிழக எல்லையை முற்றுகையிட வந்தபோது கர்நாடக போலீசார் தடுத்து நிறுத்தினர்.

PT WEB

காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையை ஏற்று தமிழகத்திற்கு கடந்த 16ஆம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் 3000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி நதிநீர் ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது. இதனை ஏற்க மறுத்த கர்நாடகா அரசு, திட்டவட்டமாக தண்ணீர் திறக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் திறக்காமல் இருந்து வருகிறது.

கடந்த 11ஆம் தேதி கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 5800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 12ஆம் தேதி முதல் 2000 முதல் 2300 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

cauvery

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மண்டியாவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என வலியுறுத்தி கடந்த 44 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாநில அளவில் போராட்டம் நடத்துவதற்காக விவசாய சங்கத்தினர் பல்வேறு கன்னட அமைப்புகளிடம் ஆதரவு கேட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஓசூர் அருகே உள்ள கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் தமிழக எல்லை இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க: ராஜஸ்தான்: சில்லறை மூட்டையுடன் ஐபோன் வாங்க சென்ற பிச்சைக்காரர் (!)...!

இதனைத்தொடர்ந்து அத்திப்பள்ளியில் இருந்து தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த கன்னட அமைப்பினரை கர்நாடக போலீசார் அம் மாநில எல்லையில் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். தடுப்புகளையும் மீறி தமிழக எல்லையை நோக்கி நுழைந்தனர். அப்போது வாட்டள் நாகராஜ் அவருடைய காரில் தமிழக எல்லையில் நுழைய முயன்றபோது போலீசார் தனியார் பேருந்தை சாலையின் குறுக்க நிறுத்தி தடுத்துள்ளனர். பின்னர் அங்கேயே அமர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் இரு மாநில எல்லையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

வாட்டாள் நாகராஜ்

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வாட்டள் நாகராஜ், "ஓசூர் பகுதி கர்நாடக மாநிலத்துடன் சேர்ந்தது. அதனால் ஓசூர் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த இருந்தோம். போலீசார் தடுத்து நிறுத்திவிட்டனர். அதையும் மீறி போராட்டம் நடத்த முயன்றோம். ஆனால் எனக்கு வேறு ஒரு சத்தியாகிரக போராட்டம் இருப்பதால் மாநில எல்லையில் போராட்டம் நடத்திவிட்டு கலைந்து செல்கிறோம்.

கர்நாடக மாநில எல்லையில் நடந்த பட்டாசு வெடி விபத்து தொடர்பாக எனது பெயரை தவறாகப் பேசியுள்ளனர். அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் தொடர்பாக காவிரி நீரை தாருங்கள் என்று தமிழக அரசு கேட்டாலோ அல்லது போராட்டம் வெடித்தாலோ, கர்நாடகாவில் ’லியோ’ படத்தை திரையிட விட மாட்டோம். திரையிடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம். கர்நாடக அரசும், தமிழக அரசும் மாமியார் - மருமகள் உறவுபோல ரகசியமாக உறவு வைத்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் இப்படியே ஓட்டிவிடலாம் என நினைக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது" என்றார்.

இதையும் படிக்க: நேற்று தீர்ப்பு.. இன்று நிச்சயதார்த்தம்: உச்சநீதிமன்றம் முன்பு மோதிரம் மாற்றிய தன்பாலின ஜோடி!