மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரிவுகளை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளரும், எம்பியுமான வைகோ தனிநபர் மசோதா ஒன்றை கொண்டுவந்தார்.
மாநிலங்களவையில் ஒவ்வொரு வெள்ளிகிழமை மதியம் தனிநபர் மசோதா மீதான விவாதம் நடைபெறும். அந்தவகையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது எம்பி வைகோ ஒரு தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார். அந்த மசோதாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும். அத்துடன், தற்போது வரை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு கொண்டு சென்ற பிரிவுகளை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை அறிமுகபடுத்தி பேசிய எம்பி வைகோ, “என்னுடைய கட்சியின் கொள்கையே கூட்டாட்சி தத்துவத்தையும் உணர்த்துவதாகும். அத்துடன் மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை அளிப்பது ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதுவரை 103 முறை திருத்தப்பட்டுள்ளது. அவற்றில் சில கூட்டாட்சி தத்துவங்களை சிதைக்கும் வகையில் இருந்துள்ளன. அதிலும் குறிப்பாக 1976ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனத்தின் போது 4 முக்கிய பிரிவுகள் மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதாவது கல்வி, காடுகள், மக்கள்தொகை குறைப்பு, நீதி வழங்குதல் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களை நிர்வகித்தல் ஆகிய பிரிவுகள் பொது பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தப் பிரிவுகள் மீண்டும் மாநில பட்டியலுக்கு திரும்ப வேண்டும். அத்துடன் தற்போது மத்திய பட்டியலில் உள்ள இதர அதிகாரங்கள் என்ற பிரிவை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.
வைகோவின் இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற மாநிலங்களவை எம்பிக்களும் மாநில அதிகாரங்களை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர். அத்துடன் அவர்கள் சர்காரியா கமிஷன், ராஜமன்னார் கமிஷன் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் சீராய்வு தொடர்பான வெங்கட் செல்லையா கமிஷன் பரிந்துரையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.