இந்தியா

காங்கிரஸ் படுதோல்வி அடைந்தபோதும் மீண்டும் வெற்றி வாகை சூடிய ஜிக்னேஷ் மேவானி - யார் இவர்?

காங்கிரஸ் படுதோல்வி அடைந்தபோதும் மீண்டும் வெற்றி வாகை சூடிய ஜிக்னேஷ் மேவானி - யார் இவர்?

JustinDurai

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தாலும் ஜிக்னேஷ் மேவானியின் வெற்றி சற்று ஆறுதல் அளிப்பதாக அக்கட்சியினர் கூறிவருகின்றனர்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் மட்டும் வென்று படுதோல்வியை சந்தித்தாலும் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட பட்டியலின செயல்பாட்டாளரான ஜிக்னேஷ் மேவானியின் வெற்றி கவனம் பெற்றுள்ளது. வட்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர் 94,765 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். மேவானியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மணிபாய் 89,837 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

யார் இந்த ஜிக்னேஷ் மேவானி?

41 வயதான ஜிக்னேஷ் மேவானி, ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் என்ற அமைப்பின் மூலம் பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். இவர் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக உக்கிரமாக விமர்சனங்களை முன்வைப்பவர் ஆவார். இந்த பின்னணியில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டதற்காக கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.   

கடந்த 2017-ம் ஆண்டு வட்கம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அவருக்கு தெரிவிக்கும் வகையில் வட்கம் தொகுதியில் தங்களது வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தவில்லை. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட மேவானி, 19,696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார்.

இதையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போதிருந்தே வட்கம் சட்டமன்றத் தொகுதியை கைப்பற்ற பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. 

இந்நிலையில்தான் ஜிக்னேஷ் மேவானி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மணிபாயை விட 4,928 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். தொடக்கத்தில் இருந்தே இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஜிக்னேஷ் காலை முதல் பின்னடைவை சந்தித்து வந்தார். இருப்பினும், இறுதியில் தன்னுடைய வெற்றியை உறுதி செய்துள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தாலும் ஜிக்னேஷ் மேவானியின் வெற்றி சற்று ஆறுதல் அளிப்பதாக அக்கட்சியினர் கூறிவருகின்றனர்.

தவற விடாதீர்: குஜராத்தில் பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு காரணமான 8 ரகசியங்கள்!