உ.பி. காட்சி ட்விட்டர்
இந்தியா

உ.பி.| இஸ்லாமிய மக்களை ஓட்டுப்போட விடாமல் விரட்டியடித்ததா காவல் துறை?.. நடந்தது என்ன? #ViralVideo

உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி ஒன்றில் இஸ்லாமிய மக்கள் வாக்களிக்கப்படாமல் விரட்டியடிக்கப்பட்டிருப்பதாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

Prakash J

நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஜனநாயகப் பெருவிழாவில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளையும் மீறி, சர்ச்சைப் பேச்சுகளும், வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவிப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி ஒன்றில் முஸ்லிம் மத மக்கள் வாக்களிக்கப்படாமல் விரட்டியடிக்கப்பட்டிருப்பதாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், இதுவரை 3 கட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. நேற்று 3வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் நேற்று மூன்றாவது கட்டமாக 10 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சாம்பல் தொகுதிக்குட்பட்ட அஸ்மாலி அருகே உள்ள ஓவாரி கிராமத்திலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இந்த கிராமத்தில் 4 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு வாக்களிக்க காத்திருந்த முஸ்லிம் மக்கள்தான் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு நின்ற இஸ்லாம் மக்கள் மற்றும் பெண்களை போலீசாரால் தாக்கி விரட்டியடிக்கப்படுவது போன்ற காட்சிகள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன. போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்ததால், அவர்கள் ஓட்டளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:"அதானி, அம்பானி குறித்து ராகுல் பேசாதது ஏன்?".. கேள்வியெழுப்பிய பிரதமர்.. பதிலடிகொடுத்த பிரியங்கா!

இதுகுறித்து அவர்கள், ”நாங்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. எங்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் போலி எனக்கூறி போலீசார் எடுத்துச் சென்றனர். அத்துடன், எங்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டது” என ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உத்தரப்பிரதேச காங்கிரஸ், "ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழித்து தேர்தலில் வெற்றி பெற பாஜக விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளது. ஆனால், இதை மாவட்ட ஆட்சியரும் காவல் துறையும் மறுத்துள்ளது. இதுகுறித்து காவல்துறை, “அங்கு யார்மீது வன்முறை நிகழ்த்தப்படவில்லை. ஒழுங்காக வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அதற்காக வரிசையைச் சரிபடுத்தினோம்” எனத் தெரிவித்துள்ளது. சம்பல் மாவட்ட ஆட்சியரும் இதே விளக்கத்தை அளித்துள்ளார். அவர், “வாக்குப்பதிவின்போது ஏராளமானோர் வாக்களித்த பின்னர் அம்மைய வளாகத்திற்குள் தேவையில்லாமல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள்தான் காவல்துறை அதிகாரிகளால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், மீண்டும் வரிசை ஒழுங்கப்படுத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: குஜராத்| வாக்குச்சாவடியைக் கைப்பற்றி இணையத்தில் வைரலாக்கிய பாஜக எம்பி மகன்.. #ViralVideo

ஆனால், சம்பலில் உள்ள அஸ்மோலி தொகுதியின் எம்எல்ஏவான பிங்கி சிங் யாதவ், ”காவல்துறையும் நிர்வாகமும் தேர்தலில் செல்வாக்கு செலுத்த முயற்சி செய்தது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

”வாக்குப்பதிவு மையங்களில் அமைதியான முறையில் கூடியிருந்த வாக்காளர்கள்மீது சம்பல் போலீசார் லத்திகளைக் கொண்டு அடித்தனர். இது, வாக்காளர்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமை. இதன்மூலம் அவர்கள் வாக்களிப்பதைத் தடுக்க நிர்வாகம் முயற்சி செய்தது” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், மற்ற எம்எல்ஏக்களான ஜியாவுர் ரஹ்மான் பார்க்கும், நீரஜ் மயூராயாவும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதையும் படிக்க: “கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டுமென்பதை மத அடிப்படையில் காங். முடிவு செய்யும்”-பிரதமர் பேச்சு!