இந்தியா

‘எச்1பி’ விசாவில் மாற்றம் கொண்டுவர அமெரிக்கா முடிவு - இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

‘எச்1பி’ விசாவில் மாற்றம் கொண்டுவர அமெரிக்கா முடிவு - இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

சங்கீதா

‘எச்1பி விசா’ நடைமுறையில் புதிய மாற்றங்களை கொண்டுவர அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதால், அங்கு ஐ.டி. துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஐ.டி. துறையில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள்தான் ‘எச்1பி மற்றும் எல்1’ விசாக்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் 2004-ம் ஆண்டு காலகட்டம் வரையில் non-immigrant visas கீழ் எச்1பி விசா வைத்துள்ள ஊழியர்களுக்கு, domestic visa revalidation திட்டத்தின் மூலம் அமெரிக்காவிலேயே, அதாவது உள்நாட்டிலேயே விசாவை புதுப்பிக்கும் முறை ( renewed or Restamped) செய்யப்பட்டு வந்தது.

ஆனால் 2004-ம் ஆண்டுக்குப் பிறகு இதில் கட்டுப்பாடு நிலவியது. அதாவது ‘எச்1பி’ மற்றும் ‘எல்1’ விசா வைத்துள்ள ஊழியர்கள் அவரவர் சொந்த நாட்டிற்கு வந்து தான் விசாவை புதுப்பிக்க வேண்டும். அதற்காக பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை, துாதரகத்தில் நேரில் சமர்ப்பித்து, விசாவைப் பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டும். இதற்காகவே எச்1பி விசா ஊழியர்கள் அவசர அவசரமாகச் சொந்த நாட்டிற்குச் வந்துவிட்டு, மீண்டும் அமெரிக்க செல்ல வேண்டியிருந்தது. இந்த நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததால், ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்கா அரசு பல்லாயிரம் வெளிநாட்டு ஊழியர்கள் பலன்பெறும் வகையில், சில ‘எச்1பி’ மற்றும் ‘எல்1’ விசா பிரிவில் இருப்பவர்களுக்கு மட்டும் "domestic visa revalidation" திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து ஒப்புதல் வழங்கத் திட்டமிட்டுள்ளது. அதாவது, உள்நாட்டிலேயே (அமெரிக்கா) விசாவை (non immigrant visa பிரிவின் கீழ்) புதுப்பிக்கும் வகையில், பரீட்சார்த்த முறையில் இந்தத் திட்டத்தை இந்த ஆண்டின் (2023) பிற்பகுதியில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த சோதனை ஓட்டத் திட்டத்தில் சாதக - பாதகங்களை கருத்தில் கொண்டு அடுத்த சில வருடத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அவ்வாறு செய்யப்படும்போது, அமெரிக்காவில் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.