உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தில் ஒரு மாதத்தில் தொடர்ந்து எட்டு முறை ஒரே பாம்பு கடித்தும் பதின் வயதுச் சிறுவன் உயிர்பிழைத்துள்ள சம்பவம் ஒருசேர ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பதினேழு வயதான யாஷ்ராஜ் மிஷ்ரா பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு பல முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறான். கடைசியாக ஆகஸ்ட் 25 ம் தேதியன்று சிறுவனை அதே பாம்பு கடித்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
"ஏன் இப்படி அந்த பாம்பு யாஷ்ராஜை குறிவைக்கிறது என்று புரிந்து கொள்ளமுடியவில்லை. பாம்பு காரணமாக மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறான். பாம்பு பற்றிய பயம் இருந்துவருகிறது. அதற்காகப் பலமுறை பூஜைகளும் செய்திருக்கிறோம். பாம்புப் பிடிப்பவரைக் கொண்டு அதை பிடிக்கவும் முயற்சி செய்தோம். எதுவும் நடக்கவில்லை" என்று ஏமாற்றத்துடன் பேசுகிறார் தந்தை சந்திரமௌலி.
(கோப்புப் படம்)
மூன்றாவது முறை ஒரே பாம்பால் கடிபட்டதும் சிறுவனை வேறொரு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அங்கேயும் அந்தப் பாம்பைப் பார்த்ததாக சிறுவன் யாஷ்ராஜ் தெரிவித்துள்ளான். மறுநாளே அதே பாம்பு அவனைக் கடித்துவிட்டதாகவும் கூறுகிறார் அவனது தந்தை. இப்படி எட்டு முறையும் மருத்துவனைக்குச் செல்வதும் சிகிச்சை பெறுவதுமாக இருந்துள்ளார்கள் அந்த சிறுவனின் குடும்பத்தினர்.
ஒரே பாம்பு ஒரு சிறுவனை எட்டு முறை கடிக்குமா என்பது ஆச்சரியமான கேள்வியாக ராம்பூர் கிராமத்து மக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.