இந்தியா

உ.பி: கால்வாயில் குதித்த பெண்ணை காப்பாற்றிய கான்ஸ்டபிள்; குவியும் பாராட்டுகள்!

உ.பி: கால்வாயில் குதித்த பெண்ணை காப்பாற்றிய கான்ஸ்டபிள்; குவியும் பாராட்டுகள்!

Sinekadhara

கணவனிடம் சண்டையிட்டு கால்வாயில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற பெண்ணை காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிளுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

தற்போது விவசாயிகள் போராட்டம் நடந்துவரும் சூழலில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கால்வாய் பகுதியில், மக்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து குறித்து கண்காணிக்கும் பணியில் போலீஸார் ஈடுப்பட்டிருந்தனர். வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஒரு பெண் கால்வாயில் குதித்துள்ளார். அவர் மூழ்குவதைப் பார்த்த அருகிலிருந்த இளைஞர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

18-20 அடி ஆழமுள்ள கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள போதிலும், பெண் மூழ்குவதைப் பார்த்த கான்ஸ்டபிள் இர்ஃபான் அலி சற்றும் யோசிக்காமல், உடனே கால்வாயில் குதித்து சுமார் 100 மீட்டர் நீந்திச்சென்று அந்த பெண்ணை மீட்டுள்ளார். கரைக்கு வருவதற்குமுன் அந்த பெண் மயக்கமடைந்ததால், அருகிலிருந்த பெண்களை அழைத்து, மயக்கமடைந்த பெண்ணுக்கு முதலுதவியும் செய்துள்ளார்.

கான்ஸ்டபிள் அலியின் கடமையை பாராட்டிய கமிஷ்னர் அலோக் சிங், அவருக்கு ரூ.20000 வெகுமதி அளித்து பாராட்டியுள்ளார்.