இந்தியா

5 நிமிடம் ஆக்சிஜனை நிறுத்திய ஓனர்... 22 உயிர்கள் பறிபோனதா? - உ.பி மருத்துவமனை சர்ச்சை

5 நிமிடம் ஆக்சிஜனை நிறுத்திய ஓனர்... 22 உயிர்கள் பறிபோனதா? - உ.பி மருத்துவமனை சர்ச்சை

நிவேதா ஜெகராஜா

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், விபரீத சோதனையில் ஈடுபட்டு 5 நிமிடங்களுக்கு ஆக்சிஜனை நிறுத்திய உரிமையாளரின் செயல் தொடர்பான வீடியோ வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ளது, பராஸ் என்ற மருத்துவமனை. தனியார் மருத்துவமனையான இங்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிற மருத்துவமனைகளை விடவும், இங்கு கொரோனா நோயாளிகள் பலரும் தொடர்ச்சியாக வருவதாக சொல்லப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக, நகரில் மற்ற மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்து வருவதும், அப்பகுதியிலேயே இந்த மருத்துவமனையில் மட்டும்தான் ஆக்சிஜன் இருப்பு அதிகம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்தநிலையில் இந்த மருத்துவமனையின் உரிமையாளர் ஜெயின் பேசும் ஒரு வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், "ஆக்ரா நகர் முழுவதும் ஆக்சிஜன் இருப்பு இல்லை. எனவே மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் வெளியேறி வேறு மருத்துவமனையில் சேர்ந்துகொள்ள கூறினோம். ஆனால், பல நோயாளிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து வெளியேறாமல் இருந்து வருகின்றனர். நிலைமையை சமாளிக்க நான் சோதனை ஒன்றை செய்தேன்.

அதன்படி, ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் யார் உயிர் பிழைப்பார்கள் என்பதை அறிந்துகொள்ள ஏப்ரல் 26 அன்று காலை 7 மணியளவில் நோயாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்த ஆக்சிஜனை ஒரு 5 நிமிடங்களுக்கு நிறுத்திவிட்டேன். உடனே 22 நோயாளிகள் மூச்சுத் திணறத் தொடங்கினர், அவர்களின் உடல்கள் நீல நிறமாக மாறத் தொடங்கின. அவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம்.

இந்தச் சம்பவத்தை வைத்து அந்த நோயாளிகளால் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை அவர்களுக்கு உணரவைத்து, சிகிச்சையிலிருந்த மற்ற 74 நோயாளிகளின் உறவினர்களை அழைத்து ஆக்சிஜன் சிலிண்டர்களை சொந்தமாக எடுத்து வரச்சொல்லி வலியுறுத்தினேன்" என்று பேசுகிறார்.

22 பேரின் உயிருடன் விளையாடிய மருத்துவமனை உரிமையாளரின் இந்தச் செயல் வெளியாகி பதைபதைக்க வைத்தது. மக்களிடையே பயத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியது. இந்த வீடியோ சிறிதுநேரத்தில் வைரலாக மருத்துவமனை உரிமையாளர் ஜெயின் சர்ச்சைக்குள்ளானார்.

ஜெயின் சொன்னதை அடுத்து அன்றைய தினம் மருத்துவமனையில் 22 உயிர்கள் பறிபோனதாக தகவல் வேகமாக பரவியது. ஆனால் அதனை மறுத்து, இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட ஆக்ரா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பாண்டே, இது தொடர்பாக கூறும்போது, "வீடியோ குறித்து விசாரணை செய்து வருகிறோம். இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. வீடியோவில் உரிமையாளர் கூறிய சம்பவம் உண்மையெனில் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்" என்றார்.

இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாவதை அறிந்த மருத்துவனை உரிமையாளர் விளக்கம் ஒன்றை கொடுத்தார். அதில், "நான் வீடியோவில் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நாங்கள் சோதனை செய்தது உண்மைதான். ஆனால் அது ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு இன்னும் சிறப்பாகச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தோம். எங்கள் மருத்துவமனையில் இதுவரை 7 நோயாளிகளுள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அப்படிப் பார்க்கையில் நான் வீடியோவில் கூறியது உண்மை என நீங்கள் நினைத்தால் இதுவரை 22 நோயாளிகள் உயிரிழந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே" என்று விளக்கம் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மருத்துவமனை வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.