இந்தியா

`இங்க 3 நாள், அங்க 3 நாள்’- 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபருக்கு கிடைத்த தீர்ப்பு!

`இங்க 3 நாள், அங்க 3 நாள்’- 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபருக்கு கிடைத்த தீர்ப்பு!

webteam

இரண்டு மனைவிகளுடனும் கணவர் சேர்ந்து வாழ்வதற்கு வழங்கிய வினோத தீர்ப்பொன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். அவர், தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று தனியாக வசித்துள்ளார். இதற்கிடையே அவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே, தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து கடந்த 2017ஆம் ஆண்டு அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்துள்ளார்.

இந்தப் பெண்ணுக்கும் இவருக்கும் மற்றொரு பெண் குழந்தை உள்ளது. அதேநேரத்தில், முதல் மனைவியின் வீட்டுக்கும் அவ்வப்போது வந்து சென்றுள்ளார். முதல் மனைவிக்கும் தன் கணவர் இரண்டாவது திருமணம் செய்த விஷயம் தெரியவில்லை. இந்த நிலையில், இரண்டாவதாக திருமணம் செய்த பெண், தன் கணவரிடம் ‘உங்கள் வீட்டுக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள். உங்களது பெற்றோரைப் பார்க்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த கணவர், இரண்டாவது மனைவியை அந்த இடத்திலிருந்து வேறு இடத்தில் கொண்டுபோய் குடியமர்த்தியதாகத் தெரிகிறது. இதனால் கணவர் மீது சந்தேகம் அடைந்த அந்தப் பெண், அவர் குறித்த விஷயங்களைத் திரட்டி அவரது சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு போனபிறகுதான் இவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது தெரியவந்தது. தனக்கு திருமணமான விஷயத்தை மறைத்தது தொடர்பாக அங்கு மூவருக்குள்ளும் பிரச்சினை எழுந்தது. இறுதியில் இவ்விவகாரம் தொடர்பாக இரண்டாவது மனைவி காவல் துறையில் புகார் அளித்தார். அங்கும் மனைவி இருவருக்குள்ளும் கடுமையான சண்டை நடந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு பின்னர் நாரி உத்தன் கேந்திராவுக்கு கவுன்சிலிங்கிற்காக மாற்றப்பட்டது. அங்கு வழங்கப்பட்ட தீர்ப்புதான் வினோதமாக இருக்கிறது.

அங்கு மூவரையும் கவுன்சிலிங்கிற்கு அனுப்பிய காவல் துறையினர், பேசி முடிவெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, திங்கள் முதல் புதன் கிழமை வரை கணவர், முதல் மனைவியின் வீட்டிலேயும், வியாழன் முதல் சனிக்கிழமை வரை இரண்டாவது மனைவியின் வீட்டிலேயும் இருந்து குடும்பம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் கணவர் எந்த மனைவியோடு இருக்க ஆசைப்படுகிறாரோ, அந்த மனைவியுடன் இருந்துகொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு மூவரும் சம்மதித்து ஒப்பந்தமும் போடப்பட்டு கையெழுத்தும் வாங்கப்பட்டுள்ளதாம். இந்த வினோதமான தீர்ப்பைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

- ஜெ.பிரகாஷ்