இந்தியா

ஐஐடியில் பயின்ற பொறியாளர் காவலர்களை அரிவாளால் துரத்திய பகீர் வீடியோ!

ஐஐடியில் பயின்ற பொறியாளர் காவலர்களை அரிவாளால் துரத்திய பகீர் வீடியோ!

ச. முத்துகிருஷ்ணன்

உத்தரப் பிரதேசம் கோரக்நாத் கோவிலில் காவலர்களை அரிவாளால் துரத்திய ஐஐடியில் பயின்ற பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை பூசாரியாக இருக்கும் கோரக்நாத் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுதப்படைக் காவலர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஐஐடியில் ரசாயனப் பொறியியல் பயின்ற அஹ்மத் முர்தாசா அப்பாசி காவலர்களை கண்மூடித்தனமாக தாக்கத் துவங்கினார். இதை சற்றும் எதிர்பாராத காவலர்கள் திகைத்து நின்றனர். கையில் அரிவாளை எடுத்து அப்பாசி காவலர்களை விரட்ட, செய்வதறியாமல் காவலர்கள் ஓட்டம் பிடிக்க, கோரக்நாத் கோயில் வளாகம் இரவு வேளையில் போர்க்களமானது. சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு அப்பாசியை காவல்துறையினர் கைது செய்தனர். சம்பவத்தில் இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் இருந்தவர்கள் பதிலுக்கு அப்பாசியை செங்கற்களால் தாக்கியதால் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பாசி அரிவாளுடன் காவலர்களை துரத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வழக்கை உ.பி., பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரிக்கத் தொடங்கினர். இது குறித்து பேசிய அப்பாசியின் தந்தை முகமது முனீர், 2017 முதல் அப்பாசி சரியான மனநிலையில் இல்லை என்று கூறினார். அப்பாசியின் சமநிலையற்ற மனநிலை மற்றும் தனியாக வாழும் அவரது போக்கு காரணமாக அவரது திருமணம் விவாகரத்தில் முடிந்ததாக கூறினார். அகமதாபாத் உட்பட பல நகரங்களில் அப்பாசி சிகிச்சை பெற்றுள்ளார் என்று அவரது தந்தை கூறினார்.

இருந்தபோதிலும் சமீபத்தில்தான் மும்பையில் இருந்து திரும்பினார் அப்பாசி. கோரக்நாத் கோவிலுக்கு அப்பாசி ஏன் வந்தார்?, மும்பைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக கோரக்பூர் ஏடிஜி அகில் குமார் தெரிவித்தார். விசாரணைக்காக நான்கு போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. முகமது முனீர் பல நிதி நிறுவனங்களில் சட்ட ஆலோசகராகவும், மருத்துவரான அவரது சகோதரர் கோரக்பூரில் உள்ள அப்பாசி மருத்துவமனையின் உரிமையாளராகவும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.