இந்தியா

"சொல்வதை கேட்பதில்லை" - உ.பி. போலீஸ் டிஜிபியை பதவி நீக்கம் செய்தார் யோகி ஆதித்யநாத்!

"சொல்வதை கேட்பதில்லை" - உ.பி. போலீஸ் டிஜிபியை பதவி நீக்கம் செய்தார் யோகி ஆதித்யநாத்!

ஜா. ஜாக்சன் சிங்

'உத்தரவுகளை செயல்படுத்துவதில்லை'; 'சொல்வதை கேட்பதில்லை' எனக் கூறி உத்தரபிரதேச காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) முகுல் கோயலை பதவியில் இருந்து நீக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச போலீஸ் டிஜிபியாக கடந்த 2021-ம் ஆண்டு பதவியேற்றவர் முகுல் கோயல். 1987-ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர், இதற்கு முன்பாக உத்தரபிரதேசத்தின் அல்மோரா, மீரட், மணிப்பூரி, சஹரான்பூர் உள்ளிட்ட 7 -க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். தான் பணிபுரிந்த மாவட்டங்கள் அனைத்திலும் ரவுடியிஸம், கட்டப்பஞ்சாயத்துகளை ஒழித்தவர் என்ற பெயர் முகுல் கோயலுக்கு உண்டு.

இதனிடையே, உத்தரபிரதேச டிஜிபியாக முகுல் கோயல் பொறுப்பேற்றது முதலாகவே அவருக்கும், அமைச்சர்கள் பலருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அமைச்சர்களின் உத்தரவுகளுக்கு மாறாக அவர் செயல்படுவதாகவும், தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் அவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. ஒருகட்டத்தில், இந்த விவகாரம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்துக்கு செல்லவே, முகுல் கோயலை அழைத்து அவரும் கண்டித்ததாக தெரிகிறது.

இருந்தபோதிலும், தனது செயல்பாடுகளை முகுல் கோயல் மாற்றிக் கொள்ளவில்லை. சில நேரங்களில் முதல்வரின் உத்தரவுகளுக்கு கூட அவர் பணிவதில்லை என்ற சூழல் உருவானது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த வாரம் முதல்வர் யோகி தலைமையில் நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை டிஜிபி முகுல் கோயல் புறக்கணித்தார். இது, முதல்வருக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டிஜிபி முகுல் கோயல் டிஜிபி பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவர் ஊர்க் காவல் படை இயக்குநராக மாற்றப்படுவதாகவும் உத்தரபிரதேச உள்துறை அமைச்சகம் நேற்று இரவு உத்தரவிட்டது. அரசின் உத்தரவுகளை செயல்படுத்தாமல் இருந்தது; பணியில் ஆர்வம் இல்லாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அந்த உத்தரவில் உ.பி. அரசு தெரிவித்துள்ளது.