இந்தியா

”நாய் கூட சீண்டாது!”.. உணவின் தரம் குறித்து கதறி அழுத உ.பி கான்ஸ்டபிள்! வைரல் வீடியோ

”நாய் கூட சீண்டாது!”.. உணவின் தரம் குறித்து கதறி அழுத உ.பி கான்ஸ்டபிள்! வைரல் வீடியோ

ச. முத்துகிருஷ்ணன்

உத்தரப் பிரதேசத்தில் தங்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து காவலர் ஒருவர் கதறி அழுது போராட்டம் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி பலத்த விவாதங்களை கிளப்பியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் காவலராக பணிபுரிந்து வரும் மனோஜ் குமார் மதிய உணவாக சில ரொட்டிகளை வாங்கிக் கொண்டு கண்ணீருடன் அந்த வீடியோவில் தோன்றுகிறார். “ஒரு நாய் கூட இந்த உணவை சாப்பிட முடியாது. ஆனால் இதைத்தான் எங்களுக்கு உணவாகக் கொடுக்கின்றனர். இது மூத்த காவல்துறை அதிகாரிகளின் மோசடி. இவர்கள் மோசடி காரணமாகவே காவல்துறையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுகிறது.

மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் காவல்துறையினருக்கு சத்தான உணவு வழங்குவதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் சுமார் 30 சதவீதம் உயர்த்தப்படும் என உறுதியளித்த போதிலும் இந்த தரமற்ற உணவுகள் வழங்கப்படுகின்றன. நான் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவேன். இது குறித்து பலமுறை டிஜிபியிடம் கூறியும் தீர்வு கிடைக்கவில்லை” என அவர் கூறினார். இதையடுத்து அங்கிருந்த காவல் அதிகாரிகள் மனோஜை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இது குறித்து பேசிய காவல்துறை மெஸ் மேலாளர், “தேவையற்ற புகாரை அவர் எழுப்புகிறார். அழுவது அவரது வழக்கமான பழக்கம்” என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி உத்தரவிட்டுள்ளார். உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய வட்ட அதிகாரி அபிஷேக் ஸ்ரீவஸ்தவாவிடம் கேட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சர்ச்சையை கிளப்பிய காவலர் மனோஜ் குமாருக்கு எதிராக ஒழுக்கமின்மை, பணியில் இல்லாதது உள்ளிட்ட 15 புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றை விசாரிக்குமாறு காவல்துறை வட்ட அதிகாரி ஹிரா லாலிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் ஆஷிஷ் திவாரி தெரிவித்தார்.