உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏ குல்தீப் சிங் கடந்த ஆண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதாக பாஜக தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் கூறினார். இந்த விவகாரத்தில் காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண்ணின் தந்தை இறந்தார். அதற்கு சாட்சியாக இருந்தவரும் மர்மமான முறையில் இறந்தார். குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
அம்மா மற்றும் அத்தையின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த அந்தப் பெண், தனது தாய், வழக்கறிஞர் மற்றும் உறவினருடன் காரில் ரேபரேலி-க்கு நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் கார் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் உயிரிழந்தனர். மேலும் அப்பெண்ணும் வழக்கறிஞரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர, பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பின. விபத்தை ஏற்படுத்திய லாரியின் பதிவெண் கிரீஸ் பயன்படுத்தி மறைக்கப்பட்டிருந்ததால் அது திட்டமிட்ட கொலை முயற்சி என குற்றம்சாட்டப்படுகிறது. எனினும் காவல்துறையினர் இதை மறுத்துள்ளனர்.
இந்நிலையில், எம்.எல்.ஏ குல்தீப் சிங் கடந்த ஆண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதாக பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து உத்தரப்பிரதேச பாஜக தலைவர் சுவதந்திர தேவ் சிங் பேசிய போது, “குல்தீப் சிங் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார். கட்சியின் முன்னாள் தலைவர் இதனை உறுதி செய்வார். குற்றவாளிகளின் பக்கம் பாஜக நிற்காது. முறையான விசாரணைக்காக சிபிஐ வசம் வழக்கை ஒப்படைத்துள்ளோம். குற்றம் உறுதி செய்யப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்.