இந்தியா

புதுச்சேரி பல்கலைக்கழகம்: முதுகலை படிப்புகளுக்கு ஆகஸ்ட்டில் அகில இந்திய நுழைவுத் தேர்வு

புதுச்சேரி பல்கலைக்கழகம்: முதுகலை படிப்புகளுக்கு ஆகஸ்ட்டில் அகில இந்திய நுழைவுத் தேர்வு

webteam

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2020-21 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
முதுகலை பட்ட படிப்புகள், முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகள், பிளஸ் டூமுடித்தவர்கள் நேரடியாக முதுகலை பட்டம் படிக்க உதவும் ஐந்தாண்டுக்கான ஒருங்கிணைந்த முதுகலை படிப்புகள், முதுகலை டிப்ளமோ படிப்புகள் உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளுக்கு அகில இந்திய அளவில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்புகள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

இங்கு சேர விரும்புபவர்கள் வரும் ஜூலை 31 தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பாடப்பிரிவுகளின் விவரங்கள், கல்வித்தகுதி, வயது வரம்பு உட்பட அனைத்து
விவரங்களையும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை,கோவை, மதுரை, திருச்சி, வேலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாடு முழுவதுமுள்ள சுமார் 36 நகரங்களில் நுழைவுத் தேர்வு நடக்க உள்ளன. பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள், மாற்றுத் திறனாளிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குறித்த விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளில் மட்டும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் இருபத்தைந்து சதவிகிதம் வரை முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

முதுகலை படிப்புகளுக்கு 600 ரூபாய் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கு 1000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவுகளை சேர்ந்தவர்கள் முதுகலைபடிப்புகளுக்கு 300 ரூபாய் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கு500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும் http://www.pondiuni.edu.in/ இணையதளத்தை அணுகலாம். நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த இந்திய மாணவர் சங்கம் இலவச பயிற்சி வகுப்பை அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள்  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfSJy67CJ3hOPmfjovdBfGdGQLxxaJshGfagKB9Pq
Z8u1Jp5g/viewform என்ற இணையக் பக்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.