இந்தியா

பெங்களூருக்கு விமானத்தில் பயணம் : தனிமைப்படுத்தல் விதியை தவிர்த்த சதானந்த கவுடா

பெங்களூருக்கு விமானத்தில் பயணம் : தனிமைப்படுத்தல் விதியை தவிர்த்த சதானந்த கவுடா

webteam

டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தனிமைப்படுத்தல் விதிகளை தவிர்த்துவிட்டுச் சென்றார்.

இந்தியாவில் 2 மாத கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி, உள்நாட்டு விமானங்களின் சேவை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அனைத்து மாநிலங்களும் பிற மாநிலங்களில் இருந்து தங்கள் மாநிலங்களுக்கு வரும் விமானப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

கர்நாடக அரசு அறிவித்துள்ள விதிமுறையின்படி மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் விமானப் பயணிகள் 7 நாட்கள் நிர்வாகத் தனிமையில் இருக்க வேண்டும். பின்னர் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு பயணிகள் விமானத்தில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா வருகை தந்தார். பெங்களூரு வந்தவுடன் அவர் தனது அரசு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர் கர்நாடக அரசின் எந்தவித தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு விளக்கமளித்த கவுடா, “தான் மத்திய அமைச்சர் என்பதால் தனக்கு விதிமுறைகள் பொருந்தாது” என தெரிவித்துள்ளார்.