இந்தியா

குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளன்றே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யத் திட்டம்

குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளன்றே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யத் திட்டம்

கலிலுல்லா

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளன்றே மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் ஒருவருட காலமாக பஞ்சாப் விவசாய பெருமக்கள் நடத்திய போராட்டத்தின் பலனாக சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். எனினும் நாடாளுமன்றத்தில் மசோதா இயற்றி இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பிரச்னைக்கு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளன்றே முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தான் குளிர்காலக் கூட்டத் தொடர் திங்கட்கிழமையன்று தொடங்குகிறது. ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெற வேண்டும். பின்னர் அந்தத் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் வழங்கியவுடன் அந்த குறிப்பிட்ட சட்டம் முறைப்படி ரத்து செய்யப்படும். சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் ஒரே மசோதா மூலம் ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவை கூட்டத் தொடரின் முதல் நாளன்றே மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர தோமர் தாக்கல் செய்வார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக டெல்லியில் திங்கட்கிழமையன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த டிராக்டர் பேரணியை விவசாய அமைப்பினர் ரத்து செய்துள்ளனர்.