ஆந்திராவில் கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நூஜிவேடு மண்டலம் கொல்லப்பள்ளி கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். நூஜிவேடு மண்டலம் லயன் தாண்டா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 14 பேர் ஒரு ஷேர் ஆட்டோவில் இன்று அதிகாலை வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஆட்டோ மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 5 கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தோரின் சத்தம் கேட்டு வந்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு நூஜிவேடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.