இந்தியா

புதுச்சேரி சட்டப்பேரவையில் 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தது மத்திய அரசு!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தது மத்திய அரசு!

EllusamyKarthik

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் மூன்று நியமன சட்டமன்ற எம்.எல்.ஏக்களை நேரடியாக நியமித்துள்ளது மத்திய அரசு. நியமிக்கபட்டுள்ள மூவரும் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள். யூனியன் பிரதேச அரசாங்க சட்டம் 1963, பிரிவு 3, உட்பிரிவு 3இன் படி மத்திய அரசு நேரடியாக புதுச்சேரி சட்டப்பேரவைக்கான மூன்று நியமன எம்.எல்.ஏக்களை நியமிப்பதாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணையில் தெரிவித்துள்ளது. 

அதன்படி வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம் மற்றும் அசோக் பாபு என மூவரை எம்.எல்.ஏக்களாக நியமித்துள்ளது. இதில் வெங்கடேசன் கடந்த 2019 வாக்கில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியவர். பின்னர் காங்கிரஸ் ஆட்சி கவிழ தனது பதவியையும் அவர் ராஜினாமா செய்திருந்தார். 

தொழில் அதிபரான வி.பி.ராமலிங்கம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக செயல்பட்ட சிவக்கொழுந்துவின் சகோதரர் ஆவார். அசோக் பாபு வழக்கறிஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக நியமன சட்டப்பேரவை உறுப்பினர் பதவி என்பது புலமை பெற்ற ஆய்வாளர்கள் மற்றும் துறை சார்ந்த அறிஞர்களுக்கும் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் கட்சி சார்புடையவர்கள் புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டு வருவதாக விமர்சிக்கின்றனர் புதுச்சேரியை சேர்ந்த அரசியல் விமர்சகர்கள். 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 3 நியமன எம்எல்ஏக்களுக்கும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவும், பட்ஜெட் ஆகியவற்றில் வாக்களிக்கவும் உரிமை உள்ளது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இந்த நியமன எம்.எல்.ஏக்களில் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.