விவேகானந்தர், டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டினார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய ட்ரம்பை ஆரத்தழுவி மோடி வரவேற்றார். பின்னர், கார் வரை சென்று ட்ரம்பை சபர்மதி ஆசிரமத்திற்கு வழியனுப்பி வைத்தார். வழிநெடுகிலும் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திற்கு வந்த ட்ரம்ப் அங்கு அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்றினார்.
நமஸ்தே என தனது உரையை தொடங்கினார் ட்ரம்ப். தனது உண்மையான நண்பர் மோடி என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பாலிவுட் திரைப்படங்கள் குறித்தும், கிரிக்கெட் குறித்தும் பேசினார், அதில் பாலிவுட்டில் வெளியாகும் படங்களை உலக மக்கள் அனைவரும் பார்த்து ரசிக்கின்றனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற சிறந்த வீரர்களை இந்தியா கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் விவேகானந்தரின் பெயரைக் குறிப்பிட்டும் புகழாரம் சூட்டினார். டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டபோது மைதானத்தில் கூடி இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.