இந்தியா

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி

Sinekadhara

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 108 நகராட்சிகளில் 102-ஐ திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பாஜக ஒரு நகராட்சியை கூட கைப்பற்றவில்லை.

108 நகராட்சிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள நகராட்சிகளில் 102 நகராட்சிகளை ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. எதிர்கட்சித் தலைவரும், பாஜக எம்.எல்.ஏவுமான சுவேந்து அதிகாரியின் குடும்பத்தினரின் வசம் இருந்த கண்டாய் நகராட்சியில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக 1,870 இடங்களை கைப்பற்றிய திரிணாமூல் காங்கிரஸ் 63 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இடதுசாரிகள் 13.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர். பாஜக 13.4 சதவீத வாக்குளை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 5 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.