கொல்கத்தாவில் நடைபாதையில் வசித்து வரும் ஒரு தாயின் கோரிக்கையை ஏற்று அவரது மகனுக்கு கல்வி கற்பதில் வழிகாட்டியாக, ஆசிரியராக உதவி செய்து வருகிறார் போக்குவரத்துக் காவலர் பிரகாஷ் கோஷ்.
கொல்கத்தாவில் உள்ள பாலிகங்கே ஐடிஐ அருகே சாலையில் போக்குவரத்துக் காவலராக பணியாற்றி வருபவர் பிரகாஷ் கோஷ். அவர் பணியாற்றும் அதே சாலையில் பள்ளிக்கு செல்ல வேண்டிய 8 வயது சிறுவன் விளையாடி திரிந்துள்ளான். சிறுவனின் தாய் சாலையோர உணவுக் கடையில் வேலை செய்து வருகிறார். தனது மகனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது மகனை அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்காக மிகவும் சிரமப்பட்டார் அவர்.
வீடற்ற தாயும் மகனும் தற்போது நடைபாதையில் வாழ்கிறார்கள். ஆனால் தனது மகன் வறுமையின் தடைகளை உடைத்து உலகில் தனது முத்திரையைப் பதிப்பார் என்ற பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார் அந்த தாய். இருப்பினும், 3 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகன் படிப்பில் ஆர்வத்தை இழந்து கொண்டிருப்பது அவருக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர் பிரகாஷ் கோஷிடம் இவை அனைத்தையும் கூறியுள்ளார்.
அதைக் கேட்ட பிரகாஷ் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாக உறுதியளித்து உள்ளார். ஆனால் அந்த உதவியின் அளவை அந்த தாயால் கூட எதிர்பார்த்திருக்க முடியாது. அடுத்த நாள்முதல் பிரகாஷ் போக்குவரத்தை மேற்பார்வையிடும்போதும் அல்லது ஷிப்ட் முடிந்து வேலையை விட்டுச் செல்லும்போதும், சிறுவனை புத்தகங்களுடன் உட்காரவைத்து பாடம் சொல்லிக்கொடுக்க துவங்கியுள்ளார். வீட்டுப்பாடங்களை சொல்லித்தருவது மற்றும் சரிபார்ப்பது முதல், அவனது எழுத்துப்பிழைகள், உச்சரிப்பு, கையெழுத்து ஆகியவற்றை சரிசெய்வது வரை அனைத்தையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.
சிறுவனின் படிப்படியான முன்னேற்றம் அவனது தாய்க்கு புதியதாக வந்த “காவலர் - ஆசிரியர்” மீது முழு நம்பிக்கையை அளித்துள்ளது. அவர் போக்குவரத்து காவலர் மட்டுமில்லாமல் , இந்த ஆசிரியர் பொறுப்பையும் சமமாக சமாளித்து நிர்வகிப்பதாக கொல்கத்தா காவல்துறை பாராட்டியுள்ளது.