இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள்|புதுச்சேரியில் சிறுமி கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் to மகளிர் RCB தோல்வி!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது புதுச்சேரியில் சிறுமிக்கு நீதி கேட்டு போராட்டம் முதல் மகளிர் பிரீமியர் லீக் போட்டி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • புதுச்சேரி சிறுமி கொலையில் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்த நிலையில்,காவல்துறை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

  • புதுச்சேரி சிறுமிக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளநிலையில், சிறுமியின் உடலுக்கு பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

  • நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது ஏன்? என புதுச்சேரி சம்பவத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • மக்களிடம் நேரடியாக நிதி வழங்குவதாக அப்பட்டமான பொய் கூறுகிறார் பிரதமர் மோடி என்றும் மாநில அரசின் நிதியை மத்திய அரசு குறைத்துவிட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

  • மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக விருப்ப மனு வழங்குவதற்கு இன்றே கடைசி நாள். இந்நிலையில், இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

  • நீங்கள் நலமா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை என இபிஎஸ் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

  • இருண்ட ஆட்சியில் இருந்து விடுபட்ட மக்கள் நலமாக இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிலளித்துள்ளார்.

  • அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்தது தேமுதிக. மேலும் எதிர்காலத்தில் வெற்றிக்கூட்டணியாக அமையும் என்று தேமுதிக கருத்து தெரிவித்துள்ளது.

  • மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி முடிவு செய்துள்ளது. மோடியை மீண்டும் பிரதமராக்க இணைந்து செயல்பட முடிவு என சரத்குமார் அறிவித்துள்ளார்.

  • டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களுடன் அண்ணாமலை உள்ளிட்ட தமிழக தலைவர்கள் நள்ளிரவில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், தமிழ்நாடு வேட்பாளர் பட்டியலை தயார் செய்வது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது.

  • கட்சிப் பணிகளை வேகப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகம், செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்கவுள்ளது.

  • மக்களவை தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் 5 பேர் போட்டியிடவுள்ளனர். மேலும், ஆரணி தொகுதிக்கு பதில் தாம் வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக மன்சூர் அலிகான் அறிவித்துள்ளனர்.

  • 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை வழங்கி தமிழக அரசு கவுரவித்த நிலையில், நீண்ட காலத்திற்கு பிறகு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக திரைக்கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

  • இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதமிடம் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  • சந்தேஷ்காளி விவகாரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பெண்களும் கொந்தளித்துள்ளனர்.ஆகவே பெண்கள் சக்தியால் திரிணமூல் காங்கிரஸ் வீழ்த்தப்படும் என மேற்குவங்க பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியுள்ளார்.

  • மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் மும்முரம் காட்டிவருகிறது.இந்நிலையில், 50 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையை ப.சிதம்பரம் தலைமயிலான குழுவானது கார்கேவிடம் வழங்கியது.

  • கேரளா பத்தனம்திட்டாவில் காட்டுப் பன்றிக்கு பயந்து கிணற்றில் விழுந்த பெண்னை 20 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.

  • ஹரியானா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேட்டில் குடும்பத்தினரே மாணவர்கள் காப்பி அடிக்க உதவியுள்ளனர்.

  • ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் ரஷ்ய ராணுவத்தில் இருந்து போர் முனைக்கு அனுப்பப்பட்ட இந்திய இளைஞர் உயிரிழந்துள்ளார்.

  • அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹாலே விலகிய நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் வாய்ப்பை பெறுவாரா டொனால்டு டிரம்ப்? என கேள்வி எழுந்துள்ளது.

  • இலங்கை கொழும்புவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தினை மேற்கொண்டனர். இந்நிலையில், கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சி மாணவர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர்..

  • மெக்சிகோவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மாணவர்களுக்கு நீதி கேட்டு அதிபர் மாளிகையின் கதவை உடைத்து போராட்டக்காரர்கள் ஆவேச போராட்டம் நடத்திவருகின்றனர்.

  • தர்மசாலா மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றனர்.இப்போட்டியில், 100ஆவது டெஸ்டில் களமிறங்குகிறார் இந்தியாவின் அஷ்வின்.மேலும், இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவுக்கும் புதிய மைல்கல்லாக அமைகிறது இப்போட்டி.

  • மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் அணி.