திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களை வைத்து விஐபி தரிசனம் செய்து வைப்பதாககூறி மோசடியில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதியில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களை வைத்து விஐபி தரிசனம் செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து திருமலையில் உள்ள முதலாவது நகர காவல் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூடுதல் எஸ்பி முனிராமைய்யா கூறுகையில்...
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதள வெப்சைட் மூலம் வெளியிடப்பட்ட டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு, கொரோனா நிபந்தனைகளை கடைப்பிடித்து அனுமதிக்கப்படுகின்றனர். இதனை அறியாத பல பக்தர்கள் ரயில்கள், பேருந்துகள் மூலமாக திருப்பதி வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய பக்தர்களிடம் ஆட்டோ மற்றும் ஜீப் டிரைவர்கள் இடைத்தரகர்களுடன் சேர்ந்து விஐபி தரிசனம் செய்து வைப்பதாக கூறி 6 டிக்கெட்களுக்கு 20,000 ரூபாய் என பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர போலி டிக்கெட்டுகளை தயார் செய்தும் பக்தர்களை மோசடி செய்து வருகின்றனர். இதுகுறித்து திருப்பதி எஸ்.பி. வெங்கட அப்பல நாயுடு உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்றது. இதுவரை பக்தர்களை ஏமாற்றி மோசடி செய்த 7 வழக்குகளில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று விஐபி தரிசனம் செய்து வைப்பதாக கூறி இருவேறு பக்தர்களிடம் 35 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டும், ராணுவ வீரர் என்று கூறி போலி டிக்கெட்டுகளை தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கியும் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
எனவே பக்தர்கள் எக்காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற இடைத்தரகர்களை நாட வேண்டாம். தேவஸ்தான இணையதள அதிகாரபூர்வ வெப்சைட்டில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்து வர வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.