ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்ட பாரத் தர்ம ஜனசேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி, இன்று காலை இந்தியா திரும்பினார்.
ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து போட்டியிட்டவர் துஷார் வெள்ளப்பள்ளி. பாரத் தர்ம ஜனசேனாவின் தலைவரான அவர், ராகுலை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டார். இவர் கேரள மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளராகவும் இருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த துஷார் வெள்ளப்பள்ளி, ரூ.19 கோடி அளவுக்கு செக் மோசடி செய்ததாக, நஸில் அப்துல்லா என்பவர் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், அஜ்மன் நகருக்கு சென்ற துஷார், அங்கு கைது செய்யப்பட்டார்.
அவரது கைது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் துஷாருக்கு அஜ்மான் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஜாமினுக்கான ரூ.1.9 கோடியை, அங்குள்ள தொழிலதிபர் யூசுப் அலி என்பவர் செலுத்தியதை அடுத்து, துஷார் விடுவிக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் நஸில் அப்துல்லா தாக்கல் செய்த ஆவணங்கள், நம்பகத்தன்மையுடன் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து துஷார் இன்று காலை கேரளா திரும்பினார். கொச்சி விமான நிலையத்தில் பாரத் தர்ம ஜனசேனா சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜக, எந்த உதவியையும் செய்யவில்லை என்று துஷாரின் தந்தை நடேசன் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டினார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து அங்கமாலியில் உள்ள அத்வைதா ஆசிரமத்துக்கு பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டார்.