இந்தியா

“96 வயதில் 98 சதவீதம் மார்க்” - கேரளாவில் அசத்தும் கார்த்தியாயினி அம்மா

“96 வயதில் 98 சதவீதம் மார்க்” - கேரளாவில் அசத்தும் கார்த்தியாயினி அம்மா

webteam

ஊடகங்களில் கார்த்தியாயினி என்ற பெயரினை சில மாதங்களுக்கு முன்பு நாம் கேள்விப்பட்டிருக்கும். 96 வயதிலும் தளராமல் கல்வியறிவினை பெறுவதற்கு முயன்று கொண்டிருப்பவர்தான் இவர். கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மா தான் எழுதிய 4ம் வகுப்புக்கு நிகரான தேர்வில் நூற்றுக்கு 98 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

இந்தியாவில் எழுத்தறிவில் முதல் இடத்தில் இருப்பது கேரள மாநிலம். கேரள மாநிலமானது 100 சதவீதம் எழுத்தறிவினை முழுமை செய்யும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ‘அக்‌ஷரலக்ஷம்’ என்ற கல்வியறிவு திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் கேரள அரசு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தத் தேர்வினை பல்வேறு வயதினை சேர்ந்தவர்களும் எழுதி வருகிறார்கள். குறிப்பாக படிப்பினை தவறவிட்ட முதியவர்களுக்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு 2086 மையங்களை கேரள அரசு ஏற்படுத்தியது. இதன் மூலம், 21,908 வார்டுகளில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் படிக்கும் திறன், எழுதும் திறன் மற்றும் கணித அறிவினை சோதிக்கும் வகையில் கேள்விகள் இருக்கும். கேரள கல்வியறிவு திட்டத்தின் கீழ் படிக்கும் மூத்த மாணவியாக, 96 வயது கார்த்தியாயினி அம்மா திகழ்கிறார். 

இந்நிலையில், ‘அக்‌ஷரலக்ஷம்’ கல்வியறிவு திட்டத்தின் கீழ் கேரள அரசு நடத்திய தேர்வில் கார்த்தியாயினி அம்மா 98 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். சுமார் 42,933 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 40 கேள்விகள் இதில் கேட்கப்பட்டுள்ளது. இதில் 40க்கும் கார்த்தியாயினி அம்மா 38 மதிப்பெண் பெற்றுள்ளார். 

தேர்வு எப்படி இருந்தது என்று கேட்ட போது, “படிக்கும் போது நிறைய விஷயங்களை படித்தேன். ஆனால், தேர்வானது மிகவும் எளிமையாகவே இருந்தது” என்றார் கார்த்தியாயினி அம்மா. மேலும், “நல்ல மதிப்பெண்கள் பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது என்னால் எழுதவும், படிக்கவும் சில கணக்குகளை போடவும் முடிகிறது” என்று கூறினார்.

96 வயதான கார்த்தியாயினி அம்மா தினமும் காலை 4 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம் கொண்டவர். கண்ணில் சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டதை தவிர, அவர் பெரிய அளவில் மருத்துவமனைக்கு சென்றதேயில்லை. 100 வயதாகும் பொழுது தான் 10 வகுப்பு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கார்த்தியாயினி அம்மா கூறுகிறார். 

வீட்டின் பொருளாதார சூழல் காரணமாக கார்த்தியாயின் அம்மா தனது இளம் வயதிலே பள்ளிப் படிப்பை கைவிட்டிருக்கிறார். கணவர் இளம் வயதிலே மரணமடைந்ததால், தனது 6 குழந்தகளை வளர்ப்பதற்காக வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். கார்த்தியாயினி அம்மா, 60 வயதான தனது மகளிடம் இருந்துதான் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவரது மகள் சில வருடங்களுக்கு முன்பு தான் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

நவம்பர் ஒன்றாம் தேதி (நாளை) கேரள தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயன் கைகளில் மெரிட் சான்றிதழ் இவர் பெறவுள்ளார். இது அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த பலன்.